Published : 30 Oct 2021 12:25 PM
Last Updated : 30 Oct 2021 12:25 PM

‘அக்வாமேன்’ நடிகருக்கு கரோனா தொற்று உறுதி: தள்ளிப்போகும் படப்பிடிப்பு?

‘அக்வாமேன்’ நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்படலாம் என்ற அச்சம் படக்குழுவினரிடையே ஏற்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘அக்வாமேன்’. டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான அக்வாமேனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அக்வாமேன்: தி லாஸ்ட் கிங்டம்’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் நாயகனான ஜாசன் மோமாவுக்கு நேற்று முன்தினம் (அக்.28) கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவரைப் படக்குழுவினர் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் மூலம் அவருக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். எனினும் படக்குழுவில் இருக்கும் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் படப்பிடிப்பைத் தள்ளிவைக்கப் படக்குழுவினர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது படக்குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாவும், படப்பிடிப்பைத் தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது என்றும் படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் ஜாசன் மோமா விரைவில் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x