பாலா படத்தை உறுதி செய்த சூர்யா

பாலா படத்தை உறுதி செய்த சூர்யா

Published on

மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கவிருப்பதை சூர்யா தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 27) சிவகுமார் தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் சந்தித்துப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை சூர்யா - கார்த்தி இருவருமே செய்திருந்தார்கள்.

இதில் இயக்குநர் பாலாவும் கலந்துகொண்டார். அப்போது தந்தை சிவகுமார், இயக்குநர் பாலா ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க, மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'நந்தா'. இந்தப் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. பாலா இயக்கத்தில் உருவான 'பிதாமகன்' படத்தில் சூர்யா - விக்ரம் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாலா - சூர்யா இணையும் படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in