Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

நட்பின்நாயகன் சசிகுமார்!- இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நேர்காணல்

சிறந்த கதாசிரியருக்கான மாநில அரசின் விருதை ‘சுந்தரபாண்டியன்’ படத்துக்காக பெற்றவர் அப்படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். தொடர்ந்து, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது இவரது இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இப்படம் நவம்பரில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், 3-வது முறையாக சசிகுமாருடன் இணைந்து ‘முந்தானை முடிச்சு’ மறுஆக்கத்தை இயக்கி வருகிறார். அவருடன் ஒரு பிரத்யேக நேர்காணல்..

ஒவ்வொரு படத்துக்கும் போதிய இடைவெளி எடுத்துக்கொள்வது ஏன்?

ரொம்ப நிதானமாக செயல்படவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், எடுத்துக்கொண்ட கதையைமுடிந்தவரை நேர்த்தியாக செய்வதற்கு நானும் என் குழுவும் மெனக்கெடுவோம். அதனால், ஒரு படத்தை பக்காவாக முடித்து, நல்லபடியாக ரிலீஸ்ஆகும் வரை அதனோடு பயணித்துவிட்டு, அதன்பிறகே அடுத்த படத்தை கையில் எடுப்பேன். அதேநேரம், படத்தின் வெற்றி, தோல்வி, வசூல் இவையெல்லாம் தயாரிப்பாளரின் களம். அதில் நான் தலையிடுவதில்லை.

‘சுந்தரபாண்டியன்’ வெளியாகி 10 ஆண்டுகள் ஆவது குறித்து..

அதில் மொத்தம் 5 கதைகளை கையாண்டிருந்தேன். ரசிகர்களுக்கு இன்னும் அது புத்தம் புதிய படம்போலவே இருக்கிறது. மாதம் ஒருமுறையாவது தொலைக்காட்சியில் அதைஒளிபரப்புகின்றனர். பார்ப்பவர்கள் இப்போதும் எனக்கு போன் போட்டுபேசுகிறார்கள். தலைமுறைகள், தொழில்நுட்பம் மாறலாம், உணர்வுகள் மாறாது. ‘சுந்தரபாண்டியன்’ படம் உணர்வுகளின் தொகுப்பு.

இப்போது மீண்டும் சசிகுமாருடன் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இது ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் தொடர்ச்சியா, அல்லது அதன் வெற்றியை மீண்டும் அறுவடை செய்யும் முயற்சியா?

நிச்சயமாக இல்லை. ‘சுந்தரபாண்டியன்’ வெற்றியை பார்த்து, எங்கள் கூட்டணியில் அதேமாதிரி படம் பண்ணித் தருமாறு பத்துக்கும் அதிகமான நிர்பந்தங்கள் வந்தன. ஆனால், நாங்கள் அந்த தவறை செய்ய விரும்பவில்லை. தவிர, இது முற்றிலும் வேறொரு களம்.மதுரை அருகே உள்ள கிராமத்தில் 1994-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை சினிமாவுக்கு ஏற்ப மாற்றி எடுத்துள்ளேன். ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’ ‘சுந்தரபாண்டியன்’ தொடங்கி, இன்று கிராமத்துக் கதைக் களங்களில் நட்புக்கும், உறவுகளுக்கும் கைகொடுக்கும் நம்பகமான நாயகனாக சசி வளர்ந்து நிற்கிறார். அவரது இமேஜுக்கு இன்னும் வலிமை சேர்க்கும் படமாக ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ இருக்கும். இந்த படத்திலும் நட்புக்கான நாயகனாகவே வருகிறார். திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவர் நட்பின் நாயகன்தான்.

உங்கள் 5-வது படத்தையும் சசிகுமாருடன் தொடங்கி இருக்கிறீர்களே?

33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வெள்ளிவிழா கண்ட படம் ‘முந்தானை முடிச்சு’. அதன் அதிகாரப்பூர்வ மறுஆக்கம்தான் இந்த படம்.‘முந்தானை முடிச்சு’ படத்தின் கதைக் கருவை அப்படியே வைத்துகொண்டு, சசிகுமார் பாணிக்கு ஏற்பகதாபாத்திரத்தை மட்டும்மாற்றி அமைக்கிறோம்.கதைக் களத்திலும் மாற்றம் உண்டு.திரைக்கதை, வசனங்கள் சிறப்பாகஅமைந்திருக்கின்றன. அதற்கு மட்டுமேஓராண்டு காலம் எடுத்துகொண்டிருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x