Published : 18 Oct 2021 10:57 AM
Last Updated : 18 Oct 2021 10:57 AM

‘முத்து’, ‘படையப்பா’ ரஜினியை 'அண்ணாத்த' படத்தில் பார்க்கலாம்: குஷ்பு பேட்டி

‘அண்ணாமலை’, ‘படையப்பா’, ‘முத்து’ ஆகிய படங்களில் பார்த்த ரஜினியை 'அண்ணாத்த' படத்தில் பார்க்கலாம் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கில இணையதளத்துக்கு குஷ்பு அளித்த பேட்டியில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘அண்ணாத்த’ படம் குறித்து நான் எதுவும் பேசக்கூடாது. ஆனால் இப்படம் ஒரு மகிழ்ச்சிகரமான படமாக இருக்கும். மக்கள் எப்போதும் பார்க்க விரும்பிய ரஜினிகாந்தை இப்படத்தில் பார்ப்பார்கள். ‘அண்ணாமலை’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, ‘முத்து’ படங்களில் பார்த்த ரஜினியை இப்படத்தில் பார்க்கலாம். அந்த ரஜினி நீண்டகாலமாகக் காணாமல் போயிருந்தார். படத்தில் எனக்கும் மீனாவுக்கும் அழகான கதாபாத்திரங்கள். அது என்னவாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவுகின்றன. ஆனால், அது ஒரு அழகிய சர்ப்ரைஸாக இருக்கும்.

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு எனக்குப் பழைய நாட்களை நினைவூட்டியது. ஏனெனில் அனைவருமே படப்பிடிப்பில் இருந்தனர். யாரும் கேரவன்களுக்குள் செல்லவில்லை. ரஜினி சாரிடம் பேசுவதற்கு நானும் மீனாவும் சற்று தயங்கினோம். காரணம் நீண்ட காலத்துக்குப் பிறகு அவரோடு நாங்கள் பணிபுரிகிறோம். எனவே அவர் எப்படிப் பேசுவார் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதன்பிறகு அவரே எங்கள் அருகே வந்து அமர்ந்து ‘ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டு அமர்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டுச் சிரித்தார்.

அவர் மிகவும் அன்பானவர். 28 ஆண்டுகளில் அவரிடம் எதுவும் மாறவில்லை. அவர் இப்போதும் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் போல கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறார். ஒரு முறை படப்பிடிப்புக்கு 5 நிமிடம் தாமதமாக வந்ததால் ஒட்டுமொத்த படக்குழுவிடமும் அவர் மன்னிப்பு கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் ‘பரவாயில்லை சார். 5 நிமிடங்கள் தானே’ என்று அவரிடம் கூறினோம். ஆனால், அவர் யாரும் தனக்காக காத்திருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அந்தப் பணிவுதான் எப்போதும் அவரைத் தனித்து விளங்கச் செய்கிறது என்று நினைக்கிறேன்''.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x