Last Updated : 10 Mar, 2016 05:58 PM

 

Published : 10 Mar 2016 05:58 PM
Last Updated : 10 Mar 2016 05:58 PM

குறும்பட படைப்பாளிகளுக்காக பெரும்பணி: கார்த்திக் சுப்புராஜ் சிறப்புத் தகவல்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வெளிவர இருக்கிறது 'அவியல்'. 5 கதைகளை புதுமுக இயக்குநர்களான ஷம்மீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோக்கேஷ் கனகராஜ், குரு ஸ்மாரன் மற்றும், 'ப்ரேமம்', 'நேரம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். 'அவியல்' படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

'அவியல்' திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் நாளை (மார்ச் 11) வெளியாக இருக்கிறது. 'அவியல்' வெளியீட்டில் மும்முரமாக இருந்த கார்த்திக் சுப்புராஜிடம் பேசியதில் இருந்து..

அது என்ன 'அவியல்'?

" 5 கதைகளின் தொகுப்பு தான் 'அவியல்'. 5 கதைகளை 5 இயக்குநர்கள் இயக்கி இருக்கிறார்கள். ANTHOLOGY என்பது ஒரே படத்தில் வெவ்வேறு இயக்குநர்களின் பணிபுரிந்திருப்பது தான். மலையாளத்தில் '5 சுந்தரிகள்' மற்றும் இந்தியில் 'பாம்பே டாக்கீஸ்' மாதிரியான படங்களின் வரிசை தான் 'அவியல்' படமும்.

போன வருடம் வெளிவந்த 'பெஞ்ச் டாக்கீஸ்' 5 குறும்படங்களின் கலவை. அப்படத்தை குறைந்த திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிட்டோம். ஆனால் 'அவியல்' படத்தை கொஞ்சம் பெரியளவில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

எதற்காக தயாரிப்பாளர் அவதாரம்?

'ஸ்டோன் பெஞ்ச்' ஆரம்பித்திற்கான நோக்கம் குறித்து "நான் இந்தத் துறைக்கு வந்தவுடன் தான் 'ஸ்டோன் பெஞ்ச்' என்ற நிறுவனம் ஆரம்பித்தேன். அதனுடைய முக்கியமான நோக்கம் என்னவென்றால், தனியாக குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வருமானம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்பது தான். இணையதளம், தொலைக்காட்சி என்பதை எல்லாம் மீறி அந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளிவர வேண்டும். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றால் அடுத்த படம் இன்னும் கொஞ்சம் பெரியளவில் பண்ண வேண்டும் என்பது தான் திட்டம்"

முன்னணி இயக்குநர்களை இயக்கச் சொல்லலாமே?

"அடுத்ததாக ஒரு படத்தை 'ஸ்டோன் பெஞ்ச்' நிறுவனத்தில் தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறது. மேலும், நாங்களே ANTHOLOGY மாதிரி ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறோம். அதில் ஒரு படத்தை கெளதம் மேனன் மாதிரி ஒரு முன்னணி இயக்குநரை இயக்கச் சொல்லிவிட்டு மற்றதை புது இயக்குநர்கள் இயக்குவார்கள். இதில் நிறைய சுதந்திரம் இருக்கிறது, எந்த மாதிரியான கதைகள் வேண்டுமானாலும் சொல்லலாம். கமர்ஷியல் படங்களைத் தாண்டி குறும்படங்கள், ஆவணப்படங்கள் இயக்கிய இயக்குநர்களுடைய படங்களையும் இதில் கொண்டு வரவேண்டும் என்பது தான் பிரதான நோக்கமாக வைத்திருக்கிறேன். இதற்கான பெரும் பணியை தொடங்குகிறோம்."

வெவ்வேறு மொழிப் படங்களை இணைத்து வெளியிடும் எண்ணம் இருக்கிறதா?

"ஒரே படத்தில் வெவ்வேறு மொழி படங்களை இணைத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அப்போது எந்த மொழி படமாக சென்சார் செய்வது என்ற கேள்வி எழுந்ததால் கைவிட்டோம். சென்சார் அதிகாரிகளிடம் பேசி பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x