Published : 13 Oct 2021 02:13 PM
Last Updated : 13 Oct 2021 02:13 PM

மீண்டும் உருவாகும் சர்ச்சை: புதிய சங்கம் உருவாக்கும் பிரகாஷ்ராஜ்

மா அமைப்புக்குப் போட்டியாகப் புதிய சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் சமீபத்தில் முடிந்துள்ளது. இதில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் அணி தோல்வியைத் தழுவியது.

விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணிக்கு ஆந்திர அரசின் ஒத்துழைப்பும், பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கு சிரஞ்சீவியின் ஒத்துழைப்பும் இருந்தது. இதனால் இந்தத் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் அனைத்துமே விவாதமாக உருவெடுத்தது.

பிரகாஷ்ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி பிரச்சாரம் மேற்கொண்டது. இதுவே பிரகாஷ்ராஜின் தோல்விக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, தன்னை ஒரு அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி மா அமைப்பிலிருந்து ராஜினாமா செய்தார் பிரகாஷ்ராஜ். அவரைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து வெற்றி பெற்ற 11 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே, பிரகாஷ்ராஜ் தனது அணியினருடன் இணைந்து புதிய சங்கமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னோட்டமாகவே சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில், "என் பக்கம் நின்ற என் அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களே. எனது ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது.

நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் பொறுப்பு என்பதை எங்கள் அணி உணர்ந்துள்ளது. உங்களை நாங்கள் என்றும் கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம். எங்களை நினைத்து நீங்கள் பெருமையடைவீர்கள்" என்று பிரகாஷ்ராஜ் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x