Published : 09 Oct 2021 03:16 PM
Last Updated : 09 Oct 2021 03:16 PM

ப்ளூ சட்டை மாறன் படத்துக்காகக் காத்திருக்கும் பாரதிராஜா

ப்ளூ சட்டையைப் போட்டுவிட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பார் என்று மாறனிடம் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆன்டி இண்டியன்'. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இதில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் பேசியதாவது:

"இந்தக் கதையைத் தயார் செய்ததும் அதைப் பதிவெல்லாம் செய்யவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நடிகர் ஆர்கேவைச் சந்தித்து படம் பண்ணப் போகிறேன் எனக் கூறியபோது, "உனக்கெதுக்குய்யா இந்த வேண்டாத வேலை..?? நீ எப்படி படம் எடுத்தாலும் கழுவி ஊத்தத்தான் போறாங்க" என அறிவுறுத்தினார். இதனால் படப்பிடிப்பு எண்ணத்தைத் தள்ளிவைத்துவிட்டு எனது கதையைப் பலரிடம் கூறி அபிப்ராயம் கேட்க ஆரம்பித்தேன். கதையையும் மெருகேற்ற ஆரம்பித்தேன்.

ஒருகட்டத்தில் என்னுடன் கூடவே உறுதுணையாக இருந்த இயக்குநர் சுப்ரமணிய சிவா, "குழந்தையைக் குளிப்பாட்டி அழகாக்கலாம்... ஆனால் அதுக்காக குளிப்பாட்டி குளிப்பாட்டி கொன்னுடக் கூடாது... அபிப்ராயம் கேட்டது போதும். படத்தை உடனே ஆரம்பியுங்கள்" என அறிவுரை கூறினார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வேலு பிரபாகரனை அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அந்த சமயத்தில் வேலு பிரபாகரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடம் நைஸாகப் பேசி அந்தக் கதையை உடனே விலைகொடுத்து வாங்கிவிட்டேன். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க 65 வயது நடிகை ஒருவர் தேவைப்பட்டார். ஆனால், பல நடிகைகள் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்கள். அப்போதுதான் பல வருடங்களாக சினிமாவில் நடனமாடி வந்த விஜயா மாமி பற்றித் தெரியவந்தது. அவர் அந்த ரோலுக்குச் சரியாக இருந்தார். அவரை நடிக்கவைத்தோம். அவருக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் பசி சத்யா அற்புதமாக நடித்துள்ளார்.

படத்தின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க 'மான்ஸ்டர்' படத்தில் நடித்த அனில்குமாரை அழைத்து நடிக்க வைத்தோம். எங்கள் படத்தில் நடிக்க அவரை அழைத்தபோது, தனது மனைவி 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடிஷனில் கலந்துகொள்ள சென்னை வரும்போது, உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஆடிஷனில் கலந்துகொண்ட அவர் மனைவி செலக்ட் ஆகவில்லை. கூடவே துணைக்கு வந்த இவர் செலக்ட் ஆகிவிட்டார். அப்படியே எங்கள் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதேபோல வேறு ஒரு படத்திற்காகப் பேசி வைத்திருந்த ஷான் என்பவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகராக அவர் வருவார், பாருங்கள். இந்தப் படத்திற்கு முக்கியத் தூணாக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். இடைவேளைக்குப் பின் பதினான்கு நிமிடங்கள் கொண்ட ஒரே காட்சியை ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடித்து நடித்துள்ளார். இத்தனைக்கும் 60 பேர் காம்பினேஷன் கொண்ட அந்தக் காட்சியை அவரது அற்புதமான நடிப்பால் ஒரே நாளில் படமாக்க முடிந்தது. பதினான்கு நிமிடக் காட்சியா, போரடித்து விடாதா என நினைப்பீர்கள்.. ஆனால் படம் பார்த்த அனைவரும் அந்தக் காட்சியைத்தான் ஹைலைட்டாகக் கூறிப் பாராட்டினார்கள்.

இந்தப் படத்தில் ஒரு அரசுக் கட்டிடத்தில் பாம் பிளாஸ்ட் பண்ணுகிற மாதிரி ஒரு காட்சியைப் படமாக்க வேண்டும். சென்னையில் அப்படி ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதியும் கிடைத்தது. ஆனால், ஒரு தீக்குச்சியைக் கூட உரசக்கூடாது என்கிற அளவுக்கு கண்டிஷன் போட்டார்கள். இந்த விஷயத்தை அறிந்த ஹரி தினேஷ் மாஸ்டர், யாரும் வந்து படப்பிடிப்பை நிறுத்துவதற்குள் ஒரு அரை மணி நேரத்தில் இந்தக் காட்சியை நீங்கள் நினைத்தபடி எடுத்துக் காட்டுகிறேன். அதன்பின் வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என எனக்கு தைரியம் சொன்னதுடன் சொன்னபடி பாம் பிளாஸ்ட் காட்சிகளை நேர்த்தியாகவும் எடுத்துக் கொடுத்தார்.

இந்தப் படத்திற்கு நான் இசையமைப்பாளர் என்றாலும் இசைப் பணிகளை எல்லாம் வில்லியம்ஸ்தான் கவனித்துக்கொண்டார். சில பேர் பாங்காங் போனால்தான் இசையமைக்க மூடு வரும் எனச் சொல்வார்கள். ஆனால், நாங்கள் ஆம்னி வேன் சைஸில் உள்ள ரூமில் உட்கார்ந்துகொண்டு இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளோம்.

படம் எடுத்து முடித்த பின்னர்தான் தயாரிப்பாளர் ஆதம் பாவா படம் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், "படம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த வெற்றியை இன்னும் முழுமையாக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் ஏதாவது காட்சிகளைப் படமாக்கி இணைக்க விரும்பினால் கூட அதற்கு எத்தனை லட்சங்களையும் செலவு செய்ய நான் தயார்" எனக் கூறினார். ஆனாலும் தேவையானவற்றை நாங்கள் சரியாகப் படமாக்கிவிட்டதால் அவரிடம் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

படம் முடிந்தவுடன் ஒருமுறை இயக்குநர் பாரதிராஜாவைச் சென்று சந்தித்தபோது, “டே சாட்டை. உன் படம் முடிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டேன். உன் படத்தை[ போடு.. நான் ஒரு புளூ சட்டையை போட்டுவிட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பாரு" என்றார்.

வருடத்திற்கு வெளியாகும் நூறு படங்களில் பத்துப் படங்கள்தான் நல்ல படங்களாக இருக்கின்றன. இந்த கரோனா காலகட்டத்தால் கிட்டத்தட்ட இருநூறு படங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அவை எல்லாம் இனிதான் வரப்போகின்றன. எல்லா படங்களையும் உடம்பை இரும்பாக்கிக் கொண்டுதான் பார்க்கவேண்டும். ஆனால், நிச்சயம் 'ஆன்டி இண்டியன்' உங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்".

இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் பேசினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x