Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

60-வது வயதில் நிறைவேறிய சினிமா கனவு: நடிகர் இளங்கோ குமணனின் அனுபவப் பகிர்வு

இளங்கோ குமணன்.

எம்.பாஸ்கரன்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் தாத்தா - பேரன் உறவையும், நெசவாளர்களின் பிரச்சினைகளையும் பேசுகிறது. இப்படத்தில் தாத்தாவாக நடித்திருப்பவர் இளங்கோ குமணன்.

இப்படத்தில் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகியுள்ள இவர், வானொலி அறிவிப்பாளாராக வாழ்க்கையைத் தொடங்கியவர். நாடகத் துறையில் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை 80-க்கும் மேற்பட்ட கலைஞர்களை வைத்து மிக பிரம்மாண்டமாக தயாரித்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு காஞ்சி மஹாபெரியவரின் வாழ்க்கை வரலாறை நாடகமாக எழுதி, நடித்து இயக்கியவர். ஆனாலும் அவர் மனசெல்லாம் திரைத்துறைக்குள் நுழைய வேண்டும் என்கிற வேட்கை நிறைந்து தளும்பியிருக்கிறது.

இருபதில் தொடங்கிய அந்தவேட்கை அறுபதில் நிறைவேறியிருப்பதாக பெருமிதம் கொள்ளும்அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: ‘‘எல்லா இளைஞர்களையும் போல நானும் என் 18 வயதில்சினிமாதான் என் துறை என முடிவுசெய்திருந்தேன். ஆனால், என் தந்தையின் மறைவும், அதையொட்டி வாழ்க்கை அழைத்து சென்ற பாதையும் பயணமும் என் கனவை குலைக்கத்தான் செய்தன. ஆனால் நான் என் கனவை எப்போதும் உயிர்ப்பாகவே வைத்திருந்தேன். நடிப்பதற்கு என்னை எப்போதும் தயாராகவே வைத்திருந்தேன். இருபதாவது வயதில் நான் ஆசைப்பட்ட கனவுத்தொழிற்சாலையின் கதவு, நடிகர் ஆதி மூலமாக அறுபதில் திறந்தது.அவருக்கு தாத்தாவாக இப்படத்தில் நான் அறிமுகமாகியுள்ளேன்.

இருபதில் தொடங்கிய என் கனவுஅறுபதில் நிறைவேறியதை அறிந்த, இலங்கையைச் சேர்ந்த பிரதீப் போஸோ என்ற இளைஞர்ஓர் ஓவியத்தை எனக்கு அனுப்பி ஒருகருத்தை பகிர்ந்துகொண்டார்.

இந்த இளைஞர் தனது 10-வதுவயதில் இருந்து ஓவியங்கள் வரையத் தொடங்கியிருக்கிறார். எந்த வரவேற்பும் இல்லாத தனது ஓவியப் பயணத்தை தனது 18-வது வயதில்விரக்தியின் விளைவாக நிறுத்திக் கொண்டிருக்கிறார். இனி ஓவியமேவரையக்கூடாது என வைராக்கியம் கொண்டிருந்த பிரதீப், இருபதில் தொடங்கிய என் நடிப்பு கனவு அறுபதில் நிறைவேறியிருப்பதை அறிந்து, தனது 27 வயதில் இப்போது மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கியிருப்பதாகக் கூறி, எனதுஉருவத்தை ஓவியமாக வரைந்து அனுப்பியிருக்கிறார்.

அறிமுகப் படக் கலைஞனாக ஒரு ரசிகரிடம் இப்படியான ஒருதாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. ‘சிவகுமாரின் சபதம்’ படம்போல நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது’’ என்கிறார் இளங்கோ குமணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x