Published : 05 Oct 2021 04:15 PM
Last Updated : 05 Oct 2021 04:15 PM

பிரபாஸை இயக்கும் சந்தீப் ரெட்டி வாங்கா?

மும்பை

பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய அளவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்', 'சலார்', நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து பிரபாஸின் 25-வது படம் உருவாகவுள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வாங்கா.

அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கையும் அவரே இயக்கினார். அதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததால், இந்தியில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இந்தியில் ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' என்ற படத்தை அடுத்து இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போதுவரை தொடங்கப்படவில்லை.

ஆனாலும், பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வாங்கா கூட்டணி என்பது வித்தியாசமானது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x