Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

திரை விமர்சனம்: ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

பூச்சேரி என்ற வறட்சியான கிராமத்தை சேர்ந்த குன்னியமுத்துவுக்கு (மிதுன் மாணிக்கம்) வாக்கப்பட்டு வருகிறார் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வீராயி (ரம்யா பாண்டியன்). வரும்போது கருப்பும் வெள்ளையுமாக இரண்டு காளைக் கன்றுகளை கல்யாணச் சீதனமாக கொண்டு வருகிறார். 4 ஆண்டுகளில் வளர்ந்து காளை மாடுகளாகும் அவற்றை, பிள்ளைகள் இல்லாத அந்த தம்பதி, சொந்தக் குழந்தைகள்போல வளர்க்கிறார்கள்.

ஒரு நாள் அந்த மாடுகள் காணாமல்போகின்றன. பதறித் துடிக்கும் தம்பதிக்கு அவர்களுடைய மாடுகள் திரும்பக் கிடைத்ததா? தொலைந்து போனவை அந்த மாடுகள் மட்டும்தானா என்பது கதை.

‘காணமல்போன மாடுகளைத் தேடும் கிராமத்து தம்பதி’ என்ற எளியஒருவரிக் கதை. அதற்குள் ஆட்சி அதிகார அரசியலை குறுக்கீடு செய்யவைத்து, இரண்டரை மணி நேரம் அலுப்பை ஏற்படுத்தாமல் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி.

தமிழ் கிராமிய வாழ்வில், செல்வமாக மட்டுமல்லாமல், பிள்ளைச் செல்வமாகவும் பார்க்கப்படும் மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான பந்தத்தை நம்பகமான காட்சிகள் மூலம் சித்தரித்துள்ளனர். உதாரணத்துக்கு, தன் மாடுகளுக்கு லாடம் அடிப்பதையும் அவற்றின் காதுகளில் துளையிடுவதையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் குமுறும் நாயகனின் குணத்தைச் சொல்லவேண்டும்.

ஒரு சாமானியனின் பிரச்சினைக்கு மாநிலம் தழுவிய கவனஈர்ப்பை காட்சி ஊடகத்தால் கொடுக்க முடியும் என்று காட்டிய அதேநேரம், டிஆர்பி ரேட்டிங்குக்காக எப்படி வேண்டுமானலும் அவை முகத்தை மாற்றிக்கொள்வதாக துணிந்து விமர்சனமும் செய்திருக்கிறார்.

ஒரு கிராமத்து தேநீர் கடையில் ‘இன்ஜினீயரிங் படித்த பரோட்டா மாஸ்டர் தேவை’ என்கிறஅறிவிப்பு பலகையைத் தொங்கவிட்டது தொடங்கி, கட்சி, அரசியல் என்று வந்துவிட்டால் அதில் சீமான்அரசியலுக்கும் இடம் உண்டு எனநையாண்டி செய்தது வரைஅத்தனையும் நன்கு எடுபடுகின்றன.

ஆனால், பல காட்சிகள் ரூம்போட்டு யோசித்த சினிமாத்தனத்துடன் மேம்போக்காக பல்லிளிக்கின்றன.

குறிப்பாக, ஊடகங்களால் முடியாமல்போய், யூ-டியூப் காணொலியால் மாற்றம் வருவதுபோல காட்டுவதை சொல்லலாம். அதேபோல, பாதிக்குப் பிறகு ‘பீப்ளி லைவ்’ இந்திப் படத்தை லபக்கி, முடிவில் தேவர் பிலிம்ஸ் பாணியில் ஆக்‌ஷன் காட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.

குன்னியமுத்துவாக மிதுன் மாணிக்கமும், வீராயியாக ரம்யா பாண்டியனும் மேக்கப் இல்லாத தோற்றத்துடன் வெள்ளந்தி மனிதர்களாக எதார்த்தமான நடிப்பில் உள்ளம் அள்ளுகின்றனர்.

அதேபோல, குன்னியமுத்துவின் நண்பராக வரும் வடிவேல் முருகேசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள புதிய நகைச்சுவை நம்பிக்கை எனலாம். தொலைக்காட்சி செய்தியாளராக வரும் வாணிபோஜன், தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

கிராமத்து வாழ்வியல் கூறும் ‘சீரா… சீரா…’ பாடல் உட்பட பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மண்மணம் வீசச் செய்திருக்கிறார்க்ரிஷ்.

வானம் பார்த்த பூமியான, உள்ளடங்கிய, வறட்சியான தென் தமிழக கிராமத்தின் முகத்தையும், அப்பகுதி மக்களின் அன்றாடப் பாடுகளின் அல்லாட்டச் சுவடுகளையும் தனது ஒளிப்பதிவில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் சுகுமார்.ஆர்.

காணாமல்போன இரண்டு காளை மாடுகளால் ஒரு கிராமத்துக்கு மீட்சிகிடைப்பதாக பின்னப்பட்ட திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், ஆட்சி அதிகார அரசியலையும், ஊடகங்களின் வீச்சையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சித்த வகையில் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது இந்த ‘ரா ரா’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x