Published : 25 Sep 2021 16:35 pm

Updated : 25 Sep 2021 16:35 pm

 

Published : 25 Sep 2021 04:35 PM
Last Updated : 25 Sep 2021 04:35 PM

என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் எஸ்பிபியும் இருக்கிறார்: இளையராஜா உருக்கம்

ilayaraja-speech-about-his-friendship-with-spb-at-his-first-year-memorial

சென்னை

எஸ்.பி.பி உடனான நட்பு குறித்து நினைவஞ்சலிக் கூட்டத்தில் இளையராஜா உருக்கமாகப் பேசினார்.

இந்தியத் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 2020-ம் ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். அவர் காலமாகி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனை முன்னிட்டுப் பலரும் அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இன்று (செப்டம்பர் 25) திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் எஸ்.பி.பி முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இளையராஜா கலந்து கொண்டார். தனது பேச்சில் எஸ்.பி.பி உடனான நட்பு குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார்.

இந்த விழாவில் எஸ்.பி.பி குறித்து இளையராஜா பேசியதாவது:

"பாலுவுக்கும் எனக்குமான நட்பு எந்த மாதிரி என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயம். ரொம்ப சர்வசாதாரணமாகப் பழகக்கூடிய நண்பர். அந்தக் காலத்திலேயே மேடையில் ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருந்தேன் என்றால் பக்கத்தில் பாலு பாடுவார். எங்களைச் சுற்றி மற்ற அனைவரும் இருப்பார்கள்.

இசையமைப்பாளராக ஆன பின்பு கூட எங்களுடைய நட்பு தொடர்ந்தது. இருவருடைய உழைப்பினால்தான் பல பாடல்கள் உங்களை வந்து சேர்ந்துள்ளன. நீ இப்படிப் பாடு, அப்படிப் பாடு என்பது என்னுடைய கற்பனை. அது வேறு விஷயம். பாடல் பதிவின்போது அந்த நட்பு இடையில் வரவே வராது. தொழில், நட்பு இரண்டுமே வேறு.

பல மேடைகளில் என்னைப் பற்றி நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் புகழ்ந்து எனக்கென்றும் ஆகப் போவதில்லை. நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து, அவருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால், எனக்கு அவர் மனதிற்குள் என்ன இடம் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியம்.

நான் ஆர்மோனியம் வாசிப்பவராக இருந்து, இசையமைப்பாளராக மாறி இருவரும் நிறையப் பாடல்கள் உருவாக்கினோம். அவர் எனக்கு மனதில் எந்த மாதிரியான இடம் கொடுத்தார் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். அவர் மருத்துவமனையில் அபாயக் கட்டத்தில் இருந்தார். பலரும் ட்விட்டரில் அவர் மீண்டு வரவேண்டும் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னிடமும் நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அவன் திரும்பி வந்துவிடுவான் என்று சொன்னேன்.

பின்பு உடல்நிலை ரொம்ப மோசமானவுடன், நானும் ஒரு வீடியோ பேசி வெளியிட்டேன். "பாலு.. உனக்காகக் காத்திருக்கிறேன் சீக்கிரம் வா" என்று அதில் சொல்லியிருப்பேன். அந்த வீடியோவை எஸ்.பி.பிக்கு நினைவு வந்தபோது எஸ்.பி.சரண் போட்டுக் காட்டியிருக்கிறான். உடனே கண் எல்லாம் கலங்கி, போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.

யாரையாவது பார்க்க வேண்டுமா என்று எஸ்.பி.பியிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது "ராஜாவை வரச் சொல்லு" என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா. அவருடைய மனதில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்றால், என்னை மட்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும். அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பதுதான் சத்தியம்"

இவ்வாறு இளையராஜா பேசினார்.

தவறவிடாதீர்!

SpbalasubramaniyamIlayarajaIlayaraja speechOne minute newsIlayaraja friendship with spbஇளையராஜாஎஸ்.பி.பிஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்இளையராஜா உடனான நட்புஇளையராஜா - எஸ்.பி.பி நட்புஎஸ்.பி.பி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x