Last Updated : 24 Sep, 2021 01:02 PM

Published : 24 Sep 2021 01:02 PM
Last Updated : 24 Sep 2021 01:02 PM

முதல் பார்வை: பேய் மாமா 

கதை: பேய் ஓட்டுகிறோம் என்று பொய் சொல்லி பங்களாவுக்குள் நுழையும் இரு குடும்பத்தினர் பேய்களிடம் சிக்கிக்கொண்டால் அதுவே பேய் மாமா. ஐடியாதான் பழசு என்று பார்த்தால் படமாக்கப்பட்ட விதமும், பேய்களின் பின்னணியும் இன்னும் பழசாக உள்ளது. எந்தப் புதுமையும் இல்லை. பேய்ப்பட வரிசையில் இதுவும் ஒரு படம், இன்னொரு படம். அவ்வளவுதான்.

யோகி பாபு: இன்னும் எத்தனை படங்களில்தான் இவரை உருவ கேலி செய்வார்கள் என்று தெரியவில்லை. அதை இவர் ஏன் தொடர்ந்து அனுமதிக்கிறார் என்றும் புரியவில்லை. வடிவேலு நடிக்க வேண்டிய படம். அவர் தப்பித்துவிட்டார். இவர் மாட்டிக்கொண்டார். கதைப்படி கிளைமேக்ஸில் நாயகனுக்கு வேலையில்லாத அரிய சினிமா. தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறையில்லாமல், எல்லை மீறாமல் செய்துள்ளார். ஆனாலும், அவரின் கரியருக்கு இது போதுமானதாக இல்லை.

மாளவிகா மேனன்: 'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்' படங்களில் நடித்த இவர் இப்போது யோகி பாபுவுக்கு நாயகியாக நடித்துள்ளார். தனியாக ஸ்கோர் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. ஓரிரு காட்சிகளைத் தவிர கூட்டத்தில் ஒருவராக வந்து போகிறார்.

நகைச்சுவை நடிகர்கள்: கோவை சரளா, சிங்கம் புலி, அனுபமா குமார், மனோ பாலா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, லொள்ளு சபா மனோகர், கிருஷ்ணமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, ரேகா, ரேஷ்மா, நமோ நாராயணா, ராகுல் தாத்தா, கணேஷ் என ஒட்டுமொத்த நகைச்சுவைப் பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு பேர் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும் சிலர் செட் பிராப்பர்ட்டி போல் இருக்கின்றனர். சிலர் திடீர் திடீரென்று காணாமல் போகின்றனர். பளிச்சென்று காமெடி செய்து யாரும் ஈர்க்கவில்லை. நகைச்சுவைக்கு வந்த சோதனை ரொம்பவே பெரிது.

ஸ்பூஃப்: புன்னகை மன்னன், பாகுபலி, பேட்ட, பிகில், பம்பாய், தலைநகரம், கோலமாவு கோகிலா, சந்திரமுகி, பிக் பாஸ், லலிதா ஜூவல்லரி, சரவணா ஸ்டோர்ஸ், சரவண பவன், புளூ சட்டை மாறன், ரஜினி அரசியல், தல- தளபதி என்று இஷ்டத்துக்கும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். ஸ்பூஃப் படமாக இருந்திருந்தால் கூட மனசைத் தேற்றியிருக்கலாம். ஆனால், இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இடைச்செருகலாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

ஒப்புதல் வாக்குமூலம்: நான் காமெடியன், ஹீரோ இல்லை. விஜய், அஜித் கூட நடிப்பது மிஸ் ஆகக்கூடாது என்று மைண்ட் வாய்ஸையே வசனமாகப் பேசி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் யோகி பாபு. இனியாவது அவர் படங்களின் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.

குறியீடு: நான் கடவுள் ராஜேந்திரன் - ரேகா ஜோடி அவ்வப்போது ஃபன் ஃபன் ஃபன் என்று சொல்லிச் சிரிக்கிறார்கள். நமக்குத்தான் சிரிப்பா? கிலோ என்ன விலை என்ற கேள்வி எழுகிறது. இல்லாத காமெடியைக் குறியீடாக உணர்த்தவும், இட்டு நிரப்பிக் கொள்ளவும் இந்த ஃபன் ஃபன் ஃபன் வசனம் சொல்லி, காமெடி வறட்சி இருப்பதைக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறார்கள்.

டெட் மார்னிங்: பேய்கள் சொல்லும் டெட் மார்னிங்கும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களுக்கான எச்சரிக்கை மணியாகவே இருந்துவிடுகிறது. இயக்குநருக்குள் இருக்கும் நல்ல மனசுதான் இப்படி அவரையும் அறியாமல் அலர்ட் செய்கிறது போல. இதனை டீஸர், ட்ரெய்லரில் போட்டிருந்தாலாவது தப்பித்திருக்கலாம். விதி வலியது.

கண்டனம்: காட்டெருமை, பன்னிமூஞ்சி வாயன், பன்னிக்குட்டி என்று யோகி பாவுவைச் சுற்றியே உருவ கேலி தொடர்கிறது. அவரின் முடி குறித்த கிண்டலும் நீள்கிறது. பேய்க்காவது உன்னைப் பிடிச்சிருக்கே என்று யோகி பாபுவின் தாய் வசனம் பேசி காமெடி என்கிற பெயரில் காயப்படுத்துகிறார். இதையெல்லாம் அனுமதித்தால் ஆத்திரம் வருது மக்களே!

தொழில்நுட்பம்: எம்வி பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். ராஜ் ஆர்யன் இசை பேய்ப் படத்துக்கான த்ரில் கூட்டவில்லை. அந்த பட்டுமலை பங்களாவின் ஊஞ்சல் ஷாட்டை மட்டும் எடிட்டர் ப்ரீத்தம் அவ்வப்போது காட்டி அலுப்பூட்டுகிறார். கட்ஸில் நிறைய கலவரமூட்டி சோதிக்கிறார்.

இயக்குநர்: ஷக்தி சிதம்பரம் முதல் பாதி வரைக்கும் இஷ்டத்துக்கும் எடுத்து எடிட்டரை விளையாடவிட்டுள்ளார். அவரும் கதையே இல்லாத படத்தை வைத்துக்கொண்டு காட்டு காட்டு என்று காட்ட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். கதாபாத்திரங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கதைதான் நகராமல் நடுவீட்டில் நாற்காலி போட்டு கம்மென்று அமர்ந்துவிட்டது. கதையின் அவுட்லைனுக்கும் ஷக்தி சிதம்பரம் கவலைப்படவில்லை. அரண்மனை, காஞ்சனா பாணி கதையை மிக்ஸியில் அடித்து அரைத்துக் கொடுத்திருக்கிறார். நகைச்சுவையில் கரை கண்ட இயக்குநர் இப்படி ஏமாற்றுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நல்ல நல்ல காமெடிப் படங்களைக் கொடுத்த மனிதர் இப்படி ஆகிட்டாரே என்று வருத்தப்பட வைத்துவிட்டார்.

ஏமாற்றம்: பட்டுமலை சித்தர் என்ற பில்டப்பில் பெரிய பின்னணி இருப்பதாக நினைத்தால் அதிலும் ஏமாற்றத்தை அள்ளித் தெளித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். எமோஷன் எடுபடவில்லை.

சின்ன ஆறுதல்: இவ்வளவு ஏமாற்றங்களுக்கு மத்தியில் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பும், குரலும் மட்டும் சின்ன ஆறுதல்.

ரசிகர்கள்: கரோனா காலத்தில் கவலை மறந்து சிரிக்கலாம், ரசிக்கலாம் என்று நினைத்து வந்த இவர்கள்தான் ரொம்ப பாவம். 'பூட்' படத்தின் இந்தி போஸ்டரையே காப்பி அடித்து பேய் மாமா போஸ்டர் உருவானதாக நெட்டிசன்கள் சமீபத்தில் கலாய்த்துத் தள்ளினர். அப்போதே சுதாரித்திருந்தால் சேதாரம் இல்லாமல் தப்பியிருக்கலாம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x