யதார்த்த நடிகர்கள் மாஸ் படங்களில் சந்திக்கும் விபத்து: சீனுராமசாமி பகிர்வு

யதார்த்த நடிகர்கள் மாஸ் படங்களில் சந்திக்கும் விபத்து: சீனுராமசாமி பகிர்வு

Published on

யதார்த்த நடிகர்கள் மாஸ் படங்கள் என்ற பாப்புலர் சினிமாக்களில் சந்திக்கும் விபத்து குறித்து இயக்குநர் சீனுராமசாமி பகிர்ந்துள்ளார்.

'கூடல் நகர்', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே', 'மாமனிதன்' ஆகிய படங்களை இயக்கிவர் சீனுராமசாமி. இவற்றில் 'இடம் பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 'மாமனிதன்' விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி, அருள்தாஸ், தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'இடிமுழக்கம்' படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. இதன் காட்சிகள் தேனி, புதுச்சேரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன.

நடிகர்களிடம் யதார்த்தமான நடிப்பை வாங்குவதில் சீனுராமசாமி அதிகம் மெனக்கெடுவார். இவர் இயக்கிய படங்களில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சுனைனா, ஐஸ்வர்யா ராஜேஷ், உதயநிதி ஆகியோரின் இயல்பான நடிப்பைப் பார்க்க முடியும்.

தற்போது சீனுராமசாமி தன் ஃபேஸ்புக் பதிவில் யதார்த்த நடிகர்கள் குறித்துக் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், ''அதீத கற்பனையான, மசாலா படங்களில் மிகை நடிப்பு, மிகை உணர்ச்சி, சுற்றி இருக்கும் சக நடிகர்கள் வெளிப்படுத்துவர். அதில் இயல்பாக யதார்த்தமாக நடிக்க முயன்றால் மிகக் குறைவாக, நடிக்காத மாதிரி தெரியும்.

கத்துவது, கர்ஜிப்பது, ஆவேசம், ஆக்ரோஷம், சண்டை, பிளிறுவது போன்ற முகபாவங்கள் உச்சம் தேவை. இதுதான் யதார்த்த நடிகர்கள் மாஸ் படங்கள் என்ற பாப்புலர் சினிமாக்களில் சந்திக்கும் விபத்து'' என்று சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் பதிவு:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in