Published : 17 Sep 2021 12:05 pm

Updated : 17 Sep 2021 12:05 pm

 

Published : 17 Sep 2021 12:05 PM
Last Updated : 17 Sep 2021 12:05 PM

எனக்கும் விஜய்க்கும் சண்டைதான்: மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

sac-speech-at-naan-kadavul-illai-trailer-launch

சென்னை

எனக்கும் விஜய்க்கும் சண்டைதான் என்று 'நான் கடவுள் இல்லை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 71-வது திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'. இதில் சமுத்திரக்கனி, சாக்‌ஷி அகர்வால், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் தாணு, சேவியர் பிரிட்டோ, இயக்குநர் ராஜேஷ், இயக்குநர் பொன்.ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

"இங்கே வந்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி. இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும்போதும் இங்கு வந்திருக்கிறார். அவர் ஒரு இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி .எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர். முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர். அவர் இங்கே வந்திருப்பது அந்த நம்பிக்கையே இங்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

நான் காமன் கோட்டையில் எட்டாம் வகுப்பு படித்தபோது தேர்வு எழுதுவதற்கு திருப்பாச்சி செல்ல வேண்டும். அங்குள்ள எங்கள் உறவினர் வீட்டில் தங்கித் தேர்வு எழுதினேன். நாளை கணக்கு பாடத் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இன்று இரவு நான் எம்.ஜி.ஆர் படத்துக்குப் போய்விட்டு வந்து நன்றாகத் தூங்கினேன். மறுநாள் தேர்வு எழுதினேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைத்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். அந்தச் சான்றிதழ் உள்ளது. எப்படி என்னால் முடிந்தது? என் ஆசிரியர் அறிவுரை கூறுவார். "வருடம் பூராவும் ஒழுங்காகப் படித்தால் போதும் தேர்வுக்கு என்று படிக்க வேண்டாம்" என்பார். அப்படித்தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு அதற்கான கூலியைக் கடவுள் கொடுப்பார். இனி ரிலாக்ஸ் ஆக இருக்கலாம். உழைப்பில் அவ்வளவு பெரிய முதலீடு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் ஒரு இயக்குநராக, நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். அவரிடம் இந்தக் கதையைச் சொல்லி நான் விவரித்தபோது, ''அதெல்லாம் விரிவாகப் பேச வேண்டாம். நான் உங்கள் படத்தில் இருக்கிறேன்" என்று சொன்னார். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.

படப்பிடிப்பில் இன்னொரு டேக் என்று நான் சொல்வதற்கு முன்பாக அவர் தயாராக இருப்பார். நான் அவரிடம் கேட்பதற்கு யோசனையாக இருக்கும்போதே ,உடனே அடுத்த டேக் போகலாமா என்று மீண்டும் நடிக்க வேண்டுமா என்று கேட்டு நடித்துக் கொடுத்தார். உங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சர்வ சுதந்திரம் கொடுத்தார். ஓர் இயக்குநருக்கு அதைவிட வேறென்ன வேண்டும்'? நான் இத்தனை படங்கள் எடுத்து இருந்தாலும், எண்ணிக்கை முக்கியமல்ல. அவரது படங்கள் சிறப்பானவை. அவரை எப்படி வேலை வாங்குவது என்று ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால், அவர் இயக்குநரின் நடிகர் ஆகிவிட்டார்.

‘பருத்திவீரன்’ சரவணனிடம் இந்தப் படத்தின் பாத்திரத்தைப் பற்றி விவரித்த போது அவர் பயந்தார். என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். அவர் ஏற்கவில்லை. பொதுவாக எல்லா படங்களிலும் கதாநாயகனைத்தான் சக்தி மிக்கவர்களாகக் காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் வில்லனைச் சக்தி மிக்கவனாகக் காட்டுகிறேன். அந்தப் பாத்திரத்தைப் பற்றிப் புரிந்துகொண்டதும் பிறகு ஒருவழியாக ஒப்புக்கொண்டார். டப்பிங் பேசிவிட்டு ''என்னைப் பார்க்க எனக்கே பயமாக இருக்கிறது" என்றார்.

கதாநாயகிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நடித்து விடுவதோடு சரி. இந்த டப்பிங் பேசவோ ப்ரமோஷன் செய்யவோ வரமாட்டார்கள். அதுதான் அவர்களது போக்காக இருக்கிறது. ஆனால், என்னுடைய கதாநாயகிகள் இனியாவும் சரி சாக்‌ஷி அகர்வாலும் சரி அப்படிப்பட்டவர்கள் அல்ல. நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்தப் படத்தின் விழா என்று சொன்னதும் 'அடுத்த படத்தின் படப்பிடிப்பை இங்கேயே தொடங்கிவிடலாமா?' என்று சாக்‌ஷி அகர்வால் கேட்டார். அப்படிப்பட்டவர்கள்தான் என் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இங்கே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருக்கிறார். அவர் எனது உறவினர் என்பதால் வரவில்லை ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்கிறார். 1993-ல் விஜய் படத்திற்கு பைனான்ஸ் செய்தார்கள். அவர்கள் நினைவாக அவர்கள் பெயரிலேயே பி.வி.கம்பைன்ஸ் சார்பில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. பிறகு சேவியர் பிரிட்டோ 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளரானார். அந்தப் படத்தைப் பெரிய அளவில் உயர்த்தினார்.

இங்கே வந்துள்ள தாணுவிடம் எப்போது பேசினாலும் "எங்கே வர வேண்டும்? எப்போது வரவேண்டும்?" என்று கேட்பார். 'துப்பாக்கி' படத்தை முதலில் நாங்கள் தொடங்கினோம். தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாமல் அவரைத் தயாரிக்கச் சொன்னேன். அந்தப் படத்தைப் பெரிய அளவில் வணிகம் செய்து பெரிய படமாக அவர் தயாரித்தார். அதற்குப் பிறகு விஜய்யின் வணிக மதிப்பு பெரிய அளவில் மாறியது. இங்கே வந்திருக்கும் இயக்குநர் ராஜேஷ், பொன்.ராம் என் பள்ளி மாணவர்கள் என்று நான் சொல்வதில் மகிழ்ச்சி. என்னிடம் உதவியாளர்களாக வருபவர்கள் தங்களுக்குத் திறமை இல்லை என்று சொல்வார்கள். நேரத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். நான் உங்களைத் திறமைசாலியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று நான் சொல்வேன்.

'சட்டம் ஒரு இருட்டறை', 'சாட்சி', 'நான் சிகப்பு மனிதன்', 'நீதிக்கு தண்டனை' போன்று எனக்கென்று ஒருவகையான பாணியில் படங்கள் எடுத்து வந்தேன். சமூகக் கதை, திரில்லர் அதில் சட்டம் எப்படிப் புகுந்து விளையாடுகிறது என்கிற வகையில் படம் எடுப்பேன்.' சட்டம் சந்திரசேகர்' என்ற பெயரே எனக்கு இருந்தது. என் மகன் நடிக்க ஆசைப்பட்டதால் 1992-ல் என் பாணியை மாற்றிக்கொண்டேன். 'ரசிகன்', 'விஷ்ணு' போன்ற படங்களை இளைஞர்களுக்காக எடுத்தேன். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய பழைய பாணியில் சமூக த்ரில்லரை, சமூக அக்கறை கொண்ட படமாக எடுத்திருக்கிறேன்.

எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் பிறந்து வருவேன் என்று கிருஷ்ணர் சொல்வதாகக் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அதே கருவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. நிச்சயம் இந்தப் படத்தில் ஒரு புது விஷயம் சொல்லி இருக்கிறேன். இதுவரை தமிழில் வராத விஷயத்தை நான் சொல்லியிருக்கிறேன். சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, தீயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அது கேட்கப்படுகிறதா இல்லையா என்பதுதான் கதை.

அமெரிக்காவில் கூட ஒரு சிறுவன் கடவுளுக்குக் கடிதம் எழுதி வெள்ளை மாளிகையில் இருந்து உதவி வந்ததாகச் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் படித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் போன கரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்டது. அதாவது போன ஆண்டு மே மாதம் முதல் ஐந்து மாதங்கள் நான் சேவியர் பிரிட்டோவின் ரிசார்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கியிருந்தேன். அப்போது என்ன செய்வது? என்னால் உழைக்காமல் இருக்க முடியாது. அப்போது தனி ஒருவனாக என்னால் உருவாக்கப்பட்டதுதான் இக்கதை. செப்டம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துவிட்டோம்.

இங்கே இயக்குநர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். உண்மைகளைப் பேச வேண்டும். அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தயங்கக் கூடாது. நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன். தைரியமாக உண்மையைப் பேசுங்கள். தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள். எல்லா இயக்குநர்களும் தைரியமாக இருக்க வேண்டும். சமூக சிந்தனையுடன் இருக்க வேண்டும். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் மனிதராக இருக்க வேண்டும். சமுத்திரக்கனி ஒரு நல்ல மனிதராக இருப்பவர். என்னைப் போலவே சமூகக் கோபம் கொண்டவர். மனிதநேயம் மிக்கவர், பணமெல்லாம் அதற்குப் பிறகுதான் என்று இருப்பவர். இப்படத்தின் மூலம் நல்ல மனிதர்களுடன் பயணம் செய்த உணர்வு எனக்கு உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன். விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று. விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் சிலர் யாரோ உட்கார்ந்து கொண்டு விஜய்யின் தாத்தா வாஹினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம். பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டிதான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள். மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் .பொய் சொல்லாதீர்கள். தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காகத் தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பேசாதீர்கள்.

உடனே அப்பா - பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம், எங்களுக்குள் சண்டைதான். இது எல்லா குடும்பத்திலும் நடப்பதுதான். குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக் கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானதுதான். விஜய் ரகசியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள். விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதைப் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய் வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நல்ல மேடை. நல்லதைச் சொல்வோம். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்”.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.


தவறவிடாதீர்!


நான் கடவுள் இல்லைநான் கடவுள் இல்லை ட்ரெய்லர் வெளியீட்டு விழாஎஸ்.ஏ.சி பேச்சுஎஸ்.ஏ.சிஎஸ்.ஏ.சந்திரசேகர்விஜய்விஜய்யுடன் சண்டைசமுத்திரக்கனிஇனியாசாக்‌ஷி அகர்வால்விஜய் ஆண்டனிOne minute newsNaan kadavul illaiNaan kadavul illai trailer launchSacSachandrasekharVijaySamuthirakaniIniyaSakshi agarwalVijay antony

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x