பிஸியாக இருந்தேன்; என் கணவர் ஆபாசப் படம் எடுத்து வந்தது குறித்து எதுவும் தெரியாது: ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்

பிஸியாக இருந்தேன்; என் கணவர் ஆபாசப் படம் எடுத்து வந்தது குறித்து எதுவும் தெரியாது: ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்
Updated on
1 min read

தான் மிகவும் பிஸியாக இருந்ததால் தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் எடுத்து வந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை மும்பை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ராஜ் குந்த்ராவுக்கு எதிரான 1400 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர். அந்த வாக்குமூலத்தில், தான் வேலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் தனது கணவர் ஆபாசப் படம் எடுத்து வந்தது தனக்குத் தெரியாது என்று ஷில்பா ஷெட்டி கூறியதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ராஜ் குந்த்ராவின் ‘ஹாட்ஷாட்ஸ்’ மற்றும் ‘பாலிஃபேம்’ உள்ளிட்ட செயலிகள் குறித்தும் தனக்குத் தெரியாது என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் ஷில்பா ஷெட்டி (16.09.21) காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அப்போது குற்றப்பத்திரிகை தாக்கலானது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷில்பா ஷெட்டி பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in