'சீதா' அவதாரம் பட நாயகியான கங்கணா

'சீதா' அவதாரம் பட நாயகியான கங்கணா
Updated on
1 min read

பன்மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் 'சீதா அவதாரம்' திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹ்யூமன் பீயிங் ஸ்டுடியோ தயாரிப்பில், அலாவுகிக் தேசாய் இயக்கத்தில் உருவாகும் படம் 'சீதா: தி இன்கார்னேஷன்'. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க, பாலிவுட்டின் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஒருகட்டத்தில் கரீனா கபூர், சீதா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும், இதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் சீதாவாக கங்கணா ரணவத் நடிக்கிறார் என்பதை படத்தரப்பு உறுதி செய்துள்ளது.

படத்தின் போஸ்டரைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கங்கணா, "மிகத் திறமையான கலைஞர்கள் கொண்ட இந்தக் குழுவுடன் இணைவதில், பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. சீதாராமரின் ஆசீர்வாதங்களுடன். ஜெய் ஸ்ரீராம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் இயக்குநர் அலாவுகிக் தேசாய், கங்கணாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "சீதா தொடங்குகிறது. நம்பிக்கையுடன் அர்ப்பணிப்பவர்களுக்கு இந்த உலகம் கண்டிப்பாக உதவும். கானல் நீராக இருந்த ஒரு விஷயம் தற்போது தெளிவாகியிருக்கிறது. இதுவரை சரியாக ஆராயப்படாத தெய்வீகக் கதாபாத்திரத்தைப் பற்றிய கனவு தற்போது நிஜமாகியிருக்கிறது. சீதாவாக நடிக்க கங்கணா ரணாவத்தை ஒப்பந்தம் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எஸ்.எஸ். ஸ்டுடியோவின் முழு ஆதரவுக்கு மிக்க நன்றி" என்றி ட்வீட் செய்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு, 'பாகுபலி', 'மணிகார்னிகா' உள்ளிட்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். கங்கணா நடிப்பில் கடந்த வாரம் 'தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in