

மகாராஷ்டிர மாநிலத்தில் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு நடிகை கங்கணா ரணவத் கோரிக்கை வைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'தலைவி'. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திட்டம் குறித்து சர்ச்சை நிலவியது. இதனால் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடுவது என்ற முடிவை எடுத்தது 'தலைவி' படக்குழு. இதனைத் தொடர்ந்து இந்தியைத் தவிர்த்து இதர மொழி வெளியீட்டு சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி தரப்படவில்லை. பாலிவுத் திரைப்பட வசூலுக்கு முக்கியமான பகுதிகளில் ஒன்று மகாராஷ்டிரா. அங்கு திரையரங்குகள் திறக்கப்படாததால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிடவும் முன்வரவில்லை.
ஆனால் தலைவி வெளியாக வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதால் தற்போது இந்தியா முழுவதும் எங்கெல்லாம் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதனையொட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் கங்கணா ரணவத் பகிர்ந்துள்ளார்.
"மகாராஷ்டிராவில் கரோனா எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. அங்கு திரையரங்குகளைத் திறந்து, இறந்து கொண்டிருக்கும் திரைத்துறையையும், திரையரங்க வியாபாரத்தையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கங்கணா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "மகாராஷ்டிரவில் உணவகங்கள், அலுவலகங்கள், உள்ளூர் ரயில்கள் என எல்லாம் செயல்படுகின்றன. ஆனால் திரையரங்குகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர அரசைப் பொருத்தவரை கோவிட் தொற்று திரையரங்குகளில் மட்டும் தான் பிரத்யேகமாகப் பரவுகிறது போல" என்று குறிப்பிட்டுள்ளார்.