Published : 25 Jun 2014 12:18 PM
Last Updated : 25 Jun 2014 12:18 PM

இத்தாலி வீரரை தோள்பட்டையில் கடித்துக் குதறிய உருகுவேயின் சுவாரேஸ்

இத்தாலி, உருகுவே இடையிலான போட்டியில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இதனால், உருகுவே வீரர் சுவாரேஸ் விளையாட 24 போட்டிகளுக்குத் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியை 1-0 என்று வீழ்த்திய உருகுவேயின் ஆட்டத்திற்கு இழிவு சேர்க்கும் விதமான இந்தச் சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் 79-வது நிமிடம் 0-0 என்று இருக்க, டிரா ஆனால் இத்தாலி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற டென்ஷனில் ஆடியது உருகுவே.

அப்போது, இத்தாலி பெனால்டி பகுதிக்குள் இத்தாலி வீரர் சியெலினியுடன் உருகுவேயின் சுவாரேஸ் பந்திற்காகப் போராடினார்.

இந்தப் போராட்டத்தின்போது சியெலினியின் தோள்பட்டை அருகே சென்று சுவாரேஸ் இடிப்பதுபோல்தான் தெரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் சுவாரேஸ் தனது பற்களைப் பிடித்துக் கொண்டு மைதானத்தில் உட்கார வலி தாங்க முடியாத சியெலினி தனது இடது தோள்பட்டையை சட்டையை விலக்கிக் காண்பித்தார். அனைத்து கேமராக்களும் கிளிக் செய்ய, அவரது தோள்பட்டையில் சுவாரேஸின் பற்கள் பதிந்த தடயம் தெரிந்தது.

'டிராகுலா' என்ற பட்டப்பெயர் கொண்ட மெக்சிகோ நடுவர் ரோட்ரிக் இந்தச் சம்பவத்தைக் கண்டு கொள்ளவில்லை. ஃபிஃபாதான் இப்போது சுவாரேஸை விசாரணை செய்து வருகிறது. இதனால் சுவாரேஸுக்கு நீண்ட காலம் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

டீகோ கோடினின் 81-வது நிமிட கோலால் உருகுவே இத்தாலியை வெளியேற்றியது. ஆனால் இந்தக் 'கடி' சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரேஸின் 'கடி' வரலாறு:

இப்போது முதன் முறையாக அவர் ஒரு வீரரை கடித்துக் குதறிவிட்டார் என்று நினைத்தால் நாம் தவறு செய்தவர்களாவோம். லீக் ஆட்டங்களில் பி.எஸ்.வி. ஐந்தோவன் வீரர் ஆட்மான் பக்கல் என்பவரை 2010ஆம் ஆண்டு இதேபோல் கடித்தார்.

பிறகு ஏப்ரல் 2013-இல் செல்சீ வீரர் பிரானிஸ்லாவ் இவானோவிச் என்பவரை கடித்துக் குதறியுள்ளார். 2010ஆம் ஆண்டு கடிக்காக 7 போட்டிகளிலும், 2013ஆம் ஆண்டு கடிக்காக 10 போட்டிகளிலும் ஏற்கனவே சுவாரேஸ் தடை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 3வது முறையாக எதிரணி வீரர் ஒருவரை கடித்துள்ளார் சுவாரேஸ். ஆனால் சர்வதேச ஆட்டத்தில் இதுவே அவரது முதல் கடி.

ஆனால் வழக்கம் போல் சுவாரேஸ் இதனை மறுத்துள்ளார். ஆனால் ஃபிஃபா துணைத் தலைவர் ஜிம் பாய்ஸ் இதனை ஏற்கவில்லை. அவர் ஏதோ ஏற்கனவே கடி சம்பவத்தில் ஈடுபடாதவர் போல் பேசுகிறார் என்று சுவாரேஸைக் கடிந்து கொண்டார்.

மேலும் சியெலினிக்கு இது ஏற்கனவே இருந்த காயம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் சியெலினி இந்தக் கடியை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x