Published : 11 Aug 2021 06:54 PM
Last Updated : 11 Aug 2021 06:54 PM

முதல் பார்வை: குருதி

கேரளாவில் உள்ள ஒரு மலைகிராமத்தில் நிலச்சரிவுக்குத் தன் மனைவியையும், குழந்தையையும் பலி கொடுத்த இப்ராஹிம் (ரோஷன் மேத்யூ) தனது தம்பி ரசூல் மற்றும் தந்தை மூஸா (மம்முகோயா) ஆகியோருடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டுக்குச் சற்று தள்ளி அதே நிலச்சரிவில் தனது மனைவியை இழந்த பிரேமனும் (மணிகண்ட ராஜன்) அவரது தங்கை சுமதியும் (ஸ்ரீண்டா) வசிக்கிறார்கள். வெவ்வேறு மதங்களைச் சார்ந்திருந்தாலும் இயற்கைப் பேரழிவால் இணைக்கப்பட்ட இவ்விரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

சுமதிக்கு இப்ராஹிம் மீது காதல். ஆனால், மனைவி, மகள் இறந்து ஓராண்டு ஆகியும் இன்னும் அத்துயரத்திலிருந்து முழுமையாக மீளாமல் இப்ராஹிம் தவிக்கிறார். மேலும் இன்னொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதில் இருக்கும் தயக்கத்தையும் சுமதியிடம் வெளிப்படுத்துகிறார்.

ஒரு நாள் இப்ராஹிமின் வீட்டுக்கு இரவு நேரத்தில் ஒரு போலீஸ்காரர் தன்னுடன் ஒரு முஸ்லிம் வியாபாரியைக் கொலை செய்த ஒரு இந்து இளைஞனைக் கைகளில் விலங்கு பூட்டி அழைத்து வருகிறார். வரும் வழியில் சில அடையாளம் தெரியாத நபர்கள் தங்களைத் தாக்கியதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்க உங்கள் வீட்டில் இரவு தங்கிக் கொள்கிறோம் என்றும் இப்ராஹிம் குடும்பத்தாரிடம் சொல்கிறார். அந்த இரவில் அந்த இரு குடும்பங்களின் வாழ்வையும் புரட்டிப் போடும் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அதன் பிறகு என்னவானது என்பதே ‘குருதி’.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல்களாக அவ்வப்போது ஊடகங்களில் நாம் பார்க்கும் சம்பவங்களைக் கதையின் கருவாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மனு வாரியர். படத்தை ப்ரித்விராஜை வைத்து விளம்பரப்படுத்தி இருந்தாலும் படத்தின் நாயகன் ரோஷன் மேத்யூதான். ‘மூத்தோன்’, ‘கப்பேலா’ ஆகிய படங்களில் முக்கியப் பாத்திரங்களில் தனது நடிப்பாற்றலைப் பேச வைத்தவர் இப்படத்தை ஒற்றை ஆளாகத் தூக்கிச் சுமக்கிறார். மனைவியையும், மகளையும் இழந்த சோகத்தை எந்நேரமும் கண்களில் சுமக்கும் கதாபாத்திரம். அந்த சோகத்தை, பார்ப்பவர்களுக்கும் எளிதே கடத்தி விடுகிறார். ஷைன் டாம் சாக்கோ, முரளி கோபி, மம்முகோயா, மணிகண்ட ராஜன் என அனைவரும் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

படம் தொடங்கி 45-வது நிமிடத்தில்தான் ப்ரித்விராஜ் வருகிறார். எனினும் அவர் வந்தபிறகுதான் படத்தின் திரைக்கதையும் சூடு பிடிக்கிறது. தனது தந்தையைக் கொன்றவனைக் கொல்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரம். வழக்கம்போல எந்தக் குறையும் சொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

90 சதவீதப் படம் இருட்டிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் பார்ப்பவர்களுக்கு எந்த உறுத்துலும் இன்றி காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் உழைப்பு தெரிகிறது. பரபரக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. படத்தின் காட்சிகளுக்குத் தேவையான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். படத்தின் பின்னணியில் ஒலிக்கும் இரண்டு பாடல்களும் மனதில் ஒட்டவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் அனிஷ் பல்யாலின் வசனங்கள். படம் தொடங்கியது முதல் இறுதிக் காட்சிவரை நெகிழச் செய்யும் கூர்மையான பல வசனங்கள் படத்தில் உண்டு. அதிலும் முக்கியமான தருணங்களில் தனக்கே உரிய அப்பாவித்தனத்தோடு மம்முகோயா நகைச்சுவையுடன் பேசும் வசனங்கள் டாப் கிளாஸ். வாட்ஸ் அப் செய்திகளால் மூளைச் சலவை செய்யப்படும் இன்றைய தலைமுறை குறித்து முரளி கோபி பேசும் வசனம் ஒரு உதாரணம்.

இடைவேளை வரை நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை அதன் பிறகு சூடு பிடித்திருக்க வேண்டும். மாறாக திசையறியாமல் எங்கெங்கோ சென்று ஒருவழியாக க்ளைமாக்ஸில் போய் நிற்கிறது. முதல் பாதி ஒரு படம் போலவும், இரண்டாம் பாதி வேறொரு படம் போலவும் உள்ளது. ஒரு கட்டத்தில் இது மலையாள சினிமாதானா என்று தோன்றும் அளவுக்கு லாஜிக் மீறல்களும், சினிமாத்தனங்களும் நிரம்பி வழிகின்றன.

படம் முழுக்க வில்லனிடமிருந்து கொலை செய்த அந்த இளைஞனைக் காப்பாற்றப் போராடும் குடும்பம், திடீரென ஜீப்பில் வில்லனையே ஏற்றிக்கொண்டு அந்த இளைஞனைப் பிடிக்க கூட்டிச் செல்கிறது. ஒரு காட்சியில் வீட்டின் மேற்கூரையிலிருந்து வீட்டுக்குள் தொங்குகிறார் வில்லன். அவருடைய பிரதான நோக்கம் வீட்டுக்குள் இருக்கும் இளைஞனைக் கொல்வதுதான். ஆனால், அவனை விட்டுவிட்டு ஹீரோவை அடிக்க மீண்டும் மேலேறிச் செல்கிறார். இப்படி இரண்டாம் பாதி முழுக்க ஏராளமான லாஜிக் ஓட்டைகள். அதிலும் வில்லனுடன் வரும் அடியாள் ஒருவர் டெர்மினேட்டர் பட வில்லன் கதாபாத்திரம் போல என்ன செய்தாலும் திரும்ப வந்துகொண்டே இருக்கிறார். இடையில் தேவையே இல்லாத இடைச்செருகலான ஒரு ட்விஸ்ட் வேறு.

நாட்டில் நிலவும் மதவெறியையும் சகிப்பின்மையையும் பற்றிப் படம் பேசுகிறது. இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதை மிக கவனமாகக் கையாண்டிருக்க வேண்டும். படத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கதாபாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்குவது, அதற்குக் கடவுளின் வார்த்தைகளைத் துணையாக எடுத்துக்கொள்வது போன்ற காட்சியமைப்பு பார்ப்பவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும். இயக்குநர் சொல்லவந்த கருத்தின் நோக்கம் சரியானதாக இருந்தாலும் கூட அது சொல்லப்பட்ட விதத்தில் திசைமாறிச் சென்று பார்வையாளர்களுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் படம் முழுவதும் ஏராளமாக இருக்கின்றன.

திறமைமிகு நடிகர்களின் அற்புதமான நடிப்பு, விறுவிறு முதல் பாதி, ஆக்‌ஷன் காட்சிகள் தவிர்த்து படத்தின் திரைக்கதைக்கு சற்றே நியாயம் செய்திருந்தால் இன்னொரு முறை பார்க்கக்கூடிய படமாக ‘குருதி’ இருந்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x