Published : 11 Aug 2021 10:08 AM
Last Updated : 11 Aug 2021 10:08 AM

5ஜி தொழில்நுட்ப வழக்கு குறித்த விமர்சனம்: மவுனம் கலைத்த ஜூஹி சாவ்லா

5ஜி தொழில்நுட்ப வழக்கு குறித்த விமர்சனங்களுக்கு நடிகை ஜூஹி சாவ்லா நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிலளித்துள்ளார்.

5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா கடந்த ஜூன் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கைக் காணொலி மூலம் விசாரித்த நீதிபதி, இது விளம்பரத்துக்காகத் தொடர்ந்த வழக்கு எனத் தள்ளுபடி செய்து, நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் ஜூஹி சாவ்லா விளம்பரத்துக்காகவே இந்த வழக்கைத் தொடர்ந்ததாக விமர்சித்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் மவுனமாக இருந்துவந்த ஜூஹி சாவ்லா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

''ஜூன் மாதம் நடந்த விஷயங்கள் அனைத்தும் என்னை மிகவும் காயப்படுத்தி, குழப்ப நிலையில் தள்ளிவிட்டன. ஒரு பக்கம் மோசமான விமர்சனங்களும், தவறான ஊடக வெளிச்சமும் என் மீது விழுந்தது என்றால் இன்னொரு பக்கம் முகம் தெரியாத மனிதர்கள் பலரும் எனக்கு முழு ஆதரவு வழங்குவதாக எனக்குக் குறுந்தகவல் அனுப்பினர். அதிலும் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் சிலர் அனுப்பிய செய்தி எனக்குக் கண்ணீரை வரவழைத்துவிட்டது. தங்களுடைய விவசாயக் குழுக்கள் மூலம் சிறு தொகையை வசூலித்து நான் அபராதம் கட்டுவதற்கு உதவ முன்வருவதாக அவர்கள் கூறினர்.

இதுபோன்ற தருணங்கள்தான் என்ன நடந்தாலும் என்னை நன்றியுள்ளவளாக இருக்கச் செய்கிறது. என் நாட்டில் உள்ள ஏராளமான சாதாரண மனிதர்களின் உடல்நலனுக்காகவே நான் குரல் எழுப்பினேன். இத்தனை நாளும் நான் அமைதியாக இருந்ததற்கான காரணம், மவுனத்துக்கென்று வலிமையான குரல் ஒன்று இருக்கிறது என்று நம்புகிறேன். இஎம்எஃப் கதிர்வீச்சு குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் என்னுடைய 11 வருட ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிகரமான, அதே நேரம் மிக முக்கியமான சில தகவல்களைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்''.

இவ்வாறு ஜூஹி சாவ்லா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x