Published : 07 Aug 2021 03:37 PM
Last Updated : 07 Aug 2021 03:37 PM

முதல் பார்வை: ப்ராஜக்ட் அக்னி (நவரசா)

அத்புதா / அற்புதம் இதற்கான கதைதான் 'ப்ராஜக்ட் அக்னி'. இதை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

அரவிந்த்சாமி இஸ்ரோவில் பணிபுரியும் ஒரு விஞ்ஞானி. தான் ஒரு அதிசயமான விஷயத்தைக் கண்டுபிடித்திருப்பதாகவும், வா பேசலாம் என்றும் தனது நண்பரான பிரசன்னாவை அழைக்கிறார். அவர் என்ன கண்டுபிடித்தார், அதன் விளைவுகள் என்ன என்பதுதான் 'ப்ராஜக்ட் அக்னி'.

இந்த 'நவரசா' ஆந்தாலஜியில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் இதுதான். இதற்கு கார்த்திக் நரேனைப் பாராட்டலாம். பல ஹாலிவுட் அறிவியல் புனைவுப் படங்களின் தாக்கத்தில் இதை எடுத்துள்ளார் என்பது தெரிந்தாலும், இவர் சொல்லியிருக்கும் விஷயம் புதுமையாக இருக்கிறது. அதுவும் பாராட்டுக்குரியது.

இந்தக் கதையில் அரவிந்த்சாமி ஒரு ஹாலிவுட் நடிகரின் பாணியில் நடித்துள்ளார். இந்தக் கதையில் முக்கால்வாசி வசனம் ஆங்கிலத்திலேயே இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அரவிந்த்சாமி கதாபாத்திரத்துக்கான வசனத்துக்கு பதில் சொல்வதோடு, அவர் நடிப்புக்கும் தோதாக இருக்கிறார் பிரசன்னா. அலட்டிக்கொள்ளாத நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

இந்தக் கதை சொல்லப்பட்ட விதம், பேசப்பட்டுள்ள சித்தாந்தங்கள் எல்லாமே ஒரு பக்கம் சுவாரசியமாகவும், இன்னொரு பக்கம் அபத்தமாகவும் இருப்பதுதான் இந்தக் கதையின் தன்மையே. இந்தப் படம் அனைவருக்கும் புரியுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பதே பதில். ஒரு வேளை இன்னும் சில முறை பார்த்தால் புரியலாம்.

'நவரசா' ஆந்தாலாஜியில் இருக்கும் மற்ற படங்களை விட, இந்தக் கதையை ஒரு முழுநீளப் படமாக எடுப்பதற்கான களம் இருக்கிறது. இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் உங்களுக்குப் புரியவில்லை என்றால் இந்தப் படம் சுத்தமாகப் பிடிக்காது. அதுவே இந்தப் படத்தின் குறை. கடைசியில் சொல்லப்படும் ஒரு ட்விஸ்ட் பெரிதாக எடுபடவில்லை. இந்தப் படத்துக்கான தமிழ் சப்-டைட்டிலும் சரியாக அமைக்கப்படவில்லை.

சுருக்கமாக, 'ப்ராஜக்ட் அக்னி' புரிந்தவர்களுக்கு செம படம். புரியாதவர்களுக்கு போரடிக்கும் படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x