Published : 06 Aug 2021 11:20 AM
Last Updated : 06 Aug 2021 11:20 AM

கௌதம் மேனன் - சிம்ஹா நட்பு: கார்த்திக் சுப்புராஜ் பகிர்வு

கௌதம் வாசுதேவ் மேனன், சிம்ஹா இடையிலான நட்பு குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இதில் நவரசத்தில் ஒன்றான அமைதியை முன்வைத்து ‘பீஸ்’ என்ற ஒரு பகுதியை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது:

''இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனைக் கல்லூரி நாட்களில் இருந்தே எனக்குத் தெரியும். ஒரு திரைப்பட இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நடிகராக, இப்போதுதான் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக என்னிடம் சொன்னார். அதனால் இப்படத்தில் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், அவர் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரிடம் தெளிவாகச் சொன்னேன்.

நாங்கள் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம். கடைசி நாளில், படப்பிடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது. ஏனென்றால் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டியிருந்தது. அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர் என்பதால் இந்த அழுத்தங்களைப் புரிந்துகொண்டு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். படத்தின் முதல் பிரதியை மிகவும் ரசித்தார். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்ஹா இருவரும் திரைக்கதை விவாதத்தின்போது மிகச்சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல் நிறைய காட்சிகள் உள்ளன. இருவருக்குமிடையே படப்பிடிப்பில் உணர்வுபூர்வமான உறவு ஏற்பட்டுவிட்டது. படத்திலும் அது மிகச்சிறப்பாக வந்திருக்கிறது''.

இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x