Published : 02 Aug 2021 01:23 PM
Last Updated : 02 Aug 2021 01:23 PM

தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள்

ஆபாசப் படங்கள் எடுத்ததாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து நடிகை ஷில்பா ஷெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் அதனைப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''ஆம். கடந்த சில நாட்கள் எல்லாப் பக்கமும் சவால் மிகுந்ததாக இருந்தது. ஏராளமான வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் வலம் வந்தன. ஊடகங்களாலும், நலம் (?) விரும்பிகளாலும் ஆதாரமற்ற தாக்குதல்களும் என் மீது தொடுக்கப்பட்டன. ஏராளமான கேலிகளும், கேள்விகளும் பதிவிடப்பட்டன. என் மீது மட்டுமின்றி, என் குடும்பத்தினர் மீதும். ஆனால், அவை எது குறித்தும் இன்னும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர்ந்து இதுகுறித்து எதுவும் நான் கூறப்போவதில்லை. எனவே, என் மீது தவறான பழி சுமத்துவதை நிறுத்துங்கள். மீண்டும் சொல்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய கொள்கை ‘புகார் சொல்லக் கூடாது; விளக்கம் சொல்லக் கூடாது’ என்பதே. நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பமாக, எங்களால இயன்ற அனைத்து சட்டப்பூர்வமான வழிகளையும் முயன்று கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு தாயாக நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது இதுதான், ‘எங்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதுகுறித்து கருத்து கூறாதீர்கள்.

நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகள் மற்றும் கடந்த 29 ஆண்டுகளாக கடினமாக உழைக்கும் ஒரு பெண். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களுடைய் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். மிக முக்கியமாக இந்தத் தருணத்தில் என்னுடைய மற்றும் என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கமாறு பணிவுடன் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுங்கள்''.

இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x