Published : 31 Jul 2021 11:25 AM
Last Updated : 31 Jul 2021 11:25 AM

டான்ஸிங் ரோஸுக்கு உயிர் கொடுத்தது எப்படி?- ஷபீர் நெகிழ்ச்சிப் பகிர்வு

டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் நடிகர் ஷபீர்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.

இதில் திரையுலக பிரபலங்கள் தொடங்கி பலரும் வெகுவாகப் பாராட்டிய கதாபாத்திரம் டான்ஸிங் ரோஸ். இதில் ஷபீர் பிரமாதமாக நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து தனியாகப் படம் பண்ண வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அளவுக்கு டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது கதாபாத்திரத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு தொடர்பாக ஷபீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்த வரவேற்பு அனைத்துக்கும் காரணம் இயக்குநர் பா.இரஞ்சித் தான். அவருக்குத்தான் இந்த அத்தனை புகழும் சேரும். அவர் என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால், இது எதுவுமே என் வாழ்வில் நிகழ்ந்திருக்காது.

இயக்குநர் பா.இரஞ்சித் படத்தில் வரும் ஒவ்வொரு பாக்ஸரையும், தனியான ஸ்டைலுடன் நிஜத்தில் வாழ்ந்த புகழ்மிகு பாக்ஸர்களை மையப்படுத்தியே உருவாக்கினார். ஆர்யாவின் கபிலன் பாத்திரம் முகம்மது அலியை மையப்படுத்தியது. மைக் டைசனுக்கான அர்ப்பணிப்பாக உருவானதுதான் வேம்புலி கதாபாத்திரம்.

என்னுடைய டான்ஸிங் ரோஸ் பாத்திரம் இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்மிகு பாக்ஸர் நசீம் ஹமீத்தை மையப்படுத்தி உருவானது. நசீம் ஹமீத் நடனத்தைப் போலவே இருக்கும், தன் கால் அசைவுகளுக்காகவே பெரும் புகழைப் பெற்றவர். நான் அவரது குத்துச்சண்டை வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து, அவரது உடல் மொழியை எனக்குள் கொண்டுவந்தேன்.

கடைசி நிமிடத்தில் இந்தப் படத்தில் பங்கேற்றதால், 2 மாத நடிப்பு மற்றும் குத்துச்சண்டை பயிற்சிகளைத் தவறவிட்டு, நேராகப் படப்பிடிப்பில்தான் கலந்துகொண்டேன். ஆனால், இயக்குநர் பா.இரஞ்சித், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இருவரும் எனது யோசனைகளை ஏற்றுக்கொண்டு, முழுப் படைப்பு சுதந்திரத்தை அளித்தனர். டான்ஸிங் ரோஸுக்கு உயிர் கொடுக்க அது எனக்குப் பேருதவியாக இருந்தது".

இவ்வாறு ஷபீர் தெரிவித்துள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு முன்பாக 'நெருங்கி வா முத்தமிடாதே', 'பேட்ட', 'டெடி', 'அடங்க மறு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷபீர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x