Published : 28 Jul 2021 11:50 am

Updated : 28 Jul 2021 11:50 am

 

Published : 28 Jul 2021 11:50 AM
Last Updated : 28 Jul 2021 11:50 AM

தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து எல்லைகளையும் கடந்த சாதனைக் கலைஞன் 

dhanush-birthday-special

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அபாரமான நடிகர் என்றும், அசைக்கமுடியாத நட்சத்திரம் என்றும் பெயர் பெற்று அதைத் தக்கவைத்தபடியே பாலிவுட் படங்களில் இந்திய அளவில் புகழ்பெற்று சர்வதேச திரைப்படங்களில் நடித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைத்து எல்லைகளையும் தாண்டி உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் இன்று (ஜூலை 28) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

20 ஆண்டுகளை நெருங்கும் திரைப் பயணத்தில் தனுஷ் உடைத்திருப்பது பிராந்திய தேசிய சர்வதேச எல்லைகளை மட்டுமல்ல. உடல்வாகு, தோற்றம், மாஸ் நடிகர், கிளாஸ் நடிகர், மசாலா படம், விருதுகளுக்கான படம் என்பது போன்ற அனைத்து வரம்புகளையும் அவர் தகர்த்தெறிந்திருக்கிறார்.


அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பள்ளிக்குச் செல்லும் விடலைச் சிறுவனாக அறிமுகமானவர் தனுஷ். அடுத்து அண்ணன் இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தில் கல்லூரி மாணவராக சபிக்கப்பட்ட குழந்தைப் பருவத்தால் விளைந்த உளவியல் சிக்கலைக் கொண்ட இளைஞனைக் கண்முன் நிறுத்தி அனைவரையும் வியக்க வைத்தார்.

'திருடா திருடா' படத்தின் மூலம் லாஜிக்கைப் பற்றிய கவலையே இல்லாத மசாலா சினிமாவிலும் வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். அந்தப் படத்தில் 'மன்மதராசா' பாடலில் அவர் ஆடிய நடனத்தில் இருந்த துடிப்பும் வேகமும் தமிழ் சினிமா அதுவரை கண்டிராதது.

'சுள்ளான்', 'தேவதையைக் கண்டேன்', 'புதுப்பேட்டை', 'ஒருநாள் ஒரு கனவு', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'பொல்லாதவன்', 'யாரடி நீ மோகினி', 'படிக்காதவன்', 'ஆடுகளம்', 'வேங்கை', 'மயக்கம் என்ன' எனத் தொடர்ந்த பயணத்தில் மாஸ் படங்களிலும் கிளாஸ் படங்களிலும் இரண்டுக்கும் இடைப்பட்ட படங்களிலும் மாறி மாறி நடிப்பது மட்டுமல்ல கிளாஸ் படங்களில் மாஸ் அம்சங்களையும் மாஸ் படங்களில் கிளாஸ் அம்சங்களையும் அநாயசமாகப் புகுத்தி இரண்டிலும் ரசிகர்களை அசத்தும் வித்தையில் கைதேர்ந்தவரானார்.

தனுஷின் மிகப் பெரிய வணிக வெற்றிப் படங்களில் அவருடைய அற்புதமான உணர்ச்சிகர நடிப்புத் திறமை வெளிப்படும். கனமான உள்ளடக்கம் கொண்ட கிளாஸ் படங்களில் கைதட்டி ஆர்ப்பரிக்க வைக்கும் ஹீரோயிசம் வெளிப்படும். 'வேலையில்லா பட்டதாரி'யில் அம்மாவின் மரணத்துக்குப் பிறகு கதறி அழாமல் அதிர்ச்சியில் உறைந்துபோவதும் மனித மனங்களின் ஆழமாகப் புதைந்திருக்கும் வன்மத்தைத் தோண்டியெடுத்த 'ஆடுகளம்' படத்தில் லுங்கியைத் தூக்கி பற்களால் கடித்தபடி அண்டர்வேர் தெரிய நடனமாடுவதும் இரண்டுக்கும் ரசிகர்களின் கை தட்டல்களைப் பெறுவதும் தனுஷ் போன்ற அரிதான நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

குறிப்பிட்ட உடல்வாகு கொண்டவர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கு மட்டுமே பொருந்துவார்கள் என்பது போன்ற எழுதப்படாத விதிகளையும் தனுஷ் உடைத்தெறிந்தார். 'புதுப்பேட்டை' படத்தில் அப்பாவிச் சிறுவன் அபாயகரமான ரெளடியாக உயரும் உருமாற்றத்தை அவர் நிகழ்த்திக் காட்டியதும் 'பொல்லாதவன்' படத்தில் சாதாரண சண்டைக் காட்சிக்கு சிக்ஸ்பேக் வைத்ததும் 'அசுரன்' படத்தில் உடல் மொழியாலும் குரலாலும் இடுங்கிய கண்களாலுமே ஐம்பது வயதை நெருங்குபவராகவும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்ததும் உடல் என்னும் எல்லையைக் கடந்த சாதனையாளராக தனுஷை நிலைநிறுத்தின.

'வட சென்னை', 'அசுரன்', 'கர்ணன்' போன்ற அரசியல் உள்ளடக்கம் நிறைந்த படங்கள் கிளாஸ் ரசிகர்கள், மாஸ் ரசிகர்கள் இரு தரப்பினரையும் சம்மான அளவில் கவர்கின்றன என்றால் தனுஷ் என்ற நடிகரின் பங்களிப்புக்கு அதில் முதன்மை முக்கியத்துவம் உண்டு. ஒரு மாஸ் நட்சத்திர நடிகராக இருந்துகொண்டே கனமான உள்ளடக்கம் கொண்ட படங்களின் நடிப்பதன் மூலம் முக்கியமான அரசியல் கருத்துகளும் பார்வைகளும் பரவலான ரசிகர்களைச் சென்றடையவைப்பது தனுஷைல் கொண்டாடப்பட வேண்டிய கலைஞனாக்குகிறது.

ஒரு மாஸ் நடிகர் அரசியல் படங்களில் நடிக்கத் தயங்கியது பழங்காலக் கதை என்றானதற்கும் தனுஷின் சமீபகால முயற்சிகள் பங்களித்துள்ளன. 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்கள் சாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் கதைகள் என்றால் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியான 'ஜகமே தந்திரம்' இனத்தால் ஒடுக்கப்பட்ட துரோகத்தால் துண்டாடப்பட்ட இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் பேசியது.

'ஆடுகளம்' படத்தில் நடித்ததற்காக இளம் வயதில் தேசிய விருது வாங்கினார். 'அசுரன்' படத்துக்காக இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். 'ஒய் திஸ் கொலவெறி' என்னும் ஜாலியான பாடலின் மூலம் தேசம் முழுவதும் புகழடைந்தார். 'ராஞ்சனா', 'ஷமிதாப்' படங்களின் மூலம் பாலிவுட்டிலும் தரமான நடிகராக அடையாளம் காணப்பட்டு தற்போது மேலும 'அத்ரங்கி ரே' உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துவருகிறார். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்னும் சர்வதேசப் படத்திலும் நடித்துவிட்டார். தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் 'தி கிரே மேன்' என்று தலைப்பிடப்பட்ட ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார்.

நடிகர், நட்சத்திரம் என்பதைத் தாண்டி. பாடகர், பாடலாசிரியராகவும் சிறப்பான பல வெற்றிப் பாடல்களைத் தந்துள்ளார். 'காக்கா முட்டை', 'விசாரணை' போன்ற சர்வதேச அங்கீகாரங்களையும் தேசிய விருதுகளையும் குவித்த தரமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 'ப .பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தவர் ஒரு முதிர்ச்சியான படைப்பாளியாகவும் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார். அடுத்து எப்போது படம் இயக்குவார் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்தார்.

ஒரு நடிகராக அனைத்து எல்லைகளையும் கடந்து சாதித்தவர் ஒரு கலைஞராக தான் கையிலெடுத்த அனைத்து கலைகளிலும் வெற்றிகளை மட்டுமல்லாமல் விருதுகளையும் குவித்தவர் தனுஷ். பல வகைகளில் வெகுஜன சினிமாவில் மிகவும் அரிதான சாதனையாளரான தனுஷ் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் மென்மேலும் பல உயரங்களை அடையவும் அவருடைய இந்தப் பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.


தவறவிடாதீர்!

தனுஷ்தனுஷ் பிறந்த நாள்தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்தனுஷ் ஸ்பெஷல்சாதனைக் கலைஞன்செல்வராகவன்கஸ்தூரி ராஜாOne minute newsDhanushDhanush birthdayDhanush birthday specialDhanush specialSelvaraghavanKasthuri raja

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x