Published : 26 Jul 2021 04:40 PM
Last Updated : 26 Jul 2021 04:40 PM

ஆபாசப் பட வழக்கு: ராஜ் குந்த்ராவுக்கு எதிராக சாட்சிகளாக மாறிய ஊழியர்கள்

ஆபாசப் படங்களைத் தயாரித்து அவற்றை ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்து ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக அவரது ஊழியர்கள் சாட்சி சொல்லியுள்ளனர்.

பாலிவுட் பிரபலமான ஷில்பாஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவர் வியான் இண்டஸ்ட்ரீஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலம் இவர் ஆபாசப்படங்களைத் தயாரித்து ஸ்ட்ரீம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை ஜூலை 27 வரை ராஜ்குந்த்ரா போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அவரது ஊழியர்களே அவருக்கு எதிராக சாட்சி சொல்லியுள்ளனர். ஆபாசப்படக் காட்சிகளை ராஜ்குந்த்ரா கூறியதால் ஹாட்ஷாட்ஸ் அப்ளிகேஷனில் இருந்து நீக்கியதாகவும் கூறியுள்ளனர். ஹாட்ஷாட்ஸ் என்ற செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் பாலிஃபேம் என்ற பெயரில் ஆபாசப்படங்களை ஸ்ட்ரீம் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியாகக் கருதப்படுபவர் யாஷ் தாக்கூர். இவர், உளவுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதும் அந்த அதிகாரியின் மனைவியின் பெயரில் ஹாட்ஷாட்ஸ் அப்ளிகேஷனுக்கான உரிமத்தைப் பெற்றதும் தெரியவந்துள்ளது.

ஆனால், அந்த அப்ளிகேஷனில் ஆபாசப்படங்கள் ஸ்ட்ரீம் ஆவதைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அப்போது யாஷ் தாக்கூர் அந்த அதிகாரியை சமாதானப்படுத்தியுள்ளார். அவை அனைத்தும் விருது வென்ற குறும்படங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்குந்த்ரா தனது தயாரிப்புகள் அனைத்தும் வயது வந்தோருக்கான படமே தவிர ஆபாசப்படம் அல்ல என்று கூறியுள்ளார். இதையேத் தான் ஷில்பா ஷெட்டியும் கூறி வருகிறார்.

ஆனால், வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக ஆதராங்கள் இறுகி வருகிறது. இதற்கிடையில் ராஜ்குந்த்ரா வழக்கில் போலீஸார் சுணக்கம் காட்டுவதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் ஆசிஷ் ஷெலார் கூறியிருக்கிறார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x