

சூர்யா ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் என்று நடிகர் கிச்சா சுதீப் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தனியார் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 'சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்தும் சூர்யா குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடைசியாக ஓடிடியில் சூரரைப் போற்று திரைப்படம் பார்த்தேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் சூர்யாவுக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர். நான் சந்தித்த அரிய மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் மிகவும் நேர்மையானவர். அவரிடம் போலித்தனம் கிடையாது. அப்படத்தில் அவருடையது பிழையில்லாத நடிப்பு என்று சொல்வேன்.
ஒரு படத்தை பார்ப்பது வேறு, ஆனால் அதை ஒரு கதையாக படிப்பது வேறு. ஒரு கதையை வைத்து அதில் நடிப்பது குறித்து தீர்மானிப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி இது வழக்கமான ஒரு ஹீரோயிச திரைப்படம் கிடையாது. கேரியரில் உச்சத்தில் இல்லாத ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு கதையை தேர்வு செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.
இவ்வாறு சுதீப் கூறியுள்ளார்.