வாழ்வாதாரம் இழந்த திரைப்படக் கலைஞர்களுக்கு அக்‌ஷய் குமார் நிதியுதவி

வாழ்வாதாரம் இழந்த திரைப்படக் கலைஞர்களுக்கு அக்‌ஷய் குமார் நிதியுதவி
Updated on
1 min read

கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பலதரப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் சினிமா துறையும் முடங்கிப் போனது. இதனால் தயாரிப்பாளர்கள் தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள், தினக்கூலி சினிமா தொழிலாளர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர்.

பாலிவுட்டில் நடிகர்கள் சோனு சூட், சல்மான் கான், ஷாரூக் கான் உட்படப் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பல்வேறு உதவிகளை வழங்கினர். கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் அலையின்போது 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தான் வெளியிட்டுள்ள வீடியோவில் அக்‌ஷய் குமார் பேசும்போது, ''கரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் சினிமா கலைஞர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தேவையான தருணங்களில் கலைஞர்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த முக்கியமான காலகட்டத்தில் அவர்களுக்காக மக்கள் முன்வந்து அவர்களுக்குத் துணையாக நிற்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in