முதலில் நீங்கள் யார்?- பாலகிருஷ்ணாவுக்குக் குவியும் கண்டனங்கள் 

முதலில் நீங்கள் யார்?- பாலகிருஷ்ணாவுக்குக் குவியும் கண்டனங்கள் 
Updated on
1 min read

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாலகிருஷ்ணாவுக்கு இணையத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில், “இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே எனக்குத் தெரியாது. நான் கவனித்ததில்லை. வருடத்துக்கு ஒரு ஹிட் பாடல் கொடுப்பார். ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். பாரத ரத்னா விருதெல்லாம் என்.டி.ஆரின் செருப்புக்குச் சமம், கால் விரல் நகத்துக்குச் சமம்” என்று பேசினார்.

அவரது இந்த சர்ச்சைப் பேச்சு இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் உட்படப் பலரும் பாலகிருஷ்ணாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர் ஒருவர் இந்திய ஆளுமையான ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து எவ்வாறு பேசலாம்? இதேபோல தமிழ் நடிகர் ஒருவர் ராஜமௌலி குறித்துப் பேசினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பயனர், ''முதலில் பாலகிருஷ்ணா யார்? வேடிக்கையான நடிகர்'' என்று கூறியுள்ளார்.

மேலும் ஒருவர், ''தனது தந்தையின் பெயரைக் கெடுப்பதற்காகவே இவர் பிறந்துள்ளார். இந்த தலைக்கனம்தான் மக்கள் அவரை வெறுக்கக் காரணம். வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இவர் ஒரு எம்எல்ஏ'' என்று பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைப் பேச்சுகள் பாலகிருஷ்ணாவுக்குப் புதிதல்ல என்றாலும் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் குறித்துப் பேசியதால் பாலகிருஷ்ணா தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in