Last Updated : 19 Jul, 2021 06:00 PM

 

Published : 19 Jul 2021 06:00 PM
Last Updated : 19 Jul 2021 06:00 PM

ஓடிடி பார்வை: ஷேர்னி - காப்பதே வீரம்

இயற்கையின் அமைப்பு குறித்த புரிதலோ, உணவுச் சங்கிலி குறித்த தெளிவோ இல்லாமல் காட்டுயிர் வதையைச் சமூகப் பொறுப்பற்ற முறையில் ஆராதிக்கும் விதமாகத் திரைப்படங்கள் காலங்காலமாகக் காட்சிப்படுத்தி வருகின்றன. எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் தொடங்கிய அந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு 2016இல் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற 'புலி முருகன்' திரைப்படமே சான்று. சாத்தியமில்லாத ஒன்றைச் சாத்தியமாக்கத் துடிக்கும் / ஏங்கும் மனிதனின் நப்பாசைக்கு வடிகாலாகவே இத்தகைய திரைப்படங்களின் நாயக பிம்பங்கள் பொதுவாகக் கட்டமைக்கப்படுகின்றன. அமேசான் பிரைமில், வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஷேர்னி' அதற்கு விதிவிலக்கு.

புத்துணர்ச்சி அளிக்கும் வித்யா பாலன்

வானில் சுழன்று, சுழன்று ஒரே நேரத்தில் பத்து நபர்களை அடிக்கும் நாயகர்களையும் வாய் தைக்கப்பட்ட சிங்கம், புலி போன்ற காட்டுயிர்களுடன் சண்டையிட்டு ஜெயிக்கும் நாயகர்களையும் பார்த்துப் பழகிய நமக்கு, இந்தப் படத்தைத் தன்னுடைய தோளில் தாங்கிச் செல்லும் வித்யா பாலனின் பாத்திர வடிவமைப்பு புத்துணர்வு அளிக்கிறது. படத்தில் வித்யா பாலன் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர். இந்தச் சமூகம் பெண்களுக்கு விதித்திருக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே அவருடைய தனிப்பட்ட வாழ்வு அமைந்திருக்கிறது. பணியில் வித்யாவின் செயல்பாடு அவருடைய அதிகார வரம்புக்கு உட்பட்டே சுழல்கின்றது.

பன்ச் வசனம் பேசவில்லை, கண்கள் சிவக்க வீர வசனம் பேசவில்லை, ஆக்ரோஷமாகக் கைகளைச் சுழற்றிச் சண்டையிடவில்லை. கண்களில் தென்படும் இயல்பான பரிவோடும், உடல் மொழியில் தென்படும் உண்மையான முனைப்போடும் ஆள் நடமாட்டமற்ற அடர்ந்த காட்டினுள் அவர் தயக்கமின்றி உலவும் காட்சிகளும், உணர்வுவயப்பட்டுக் கோபத்தில் தகித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைத் தனித்து அணுகும் காட்சிகளும் எந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களும் ஏற்படுத்தாத தாக்கத்தை நம்மிடம் ஏற்படுத்துகின்றன. அவமானம், இயலாமை, அவற்றை மீறிச் செல்லும் ஆர்ப்பாட்டமற்ற துணிவு போன்றவற்றை வெளிப்படுத்தும் தேர்ந்த நடிப்பு அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று.

கதைக்களம்

வித்யா பாலன் ஒரு நேர்மையான காட்டிலாகா அதிகாரி. இயற்கையை நேசிப்பவர். பணியிடமாற்றம் காரணமாக மத்தியப் பிரதேசத்தின் ஒரு சரகத்தில் அவர் புதிதாகப் பொறுப்பேற்க நேர்கிறது. ஊரின் அமைப்பும் வட்டார அரசியலின் போக்கும் அவருக்குப் புரிபடும் முன்னரே, பெண் புலி ஒன்று அதன் வழித்தடத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக் கொல்லத் தொடங்குகிறது.

தேர்தல் நேரம் என்பதால், அது அரசியல் பிரச்சினையாக மாறுகிறது. புலியைக் கொல்வோம் என்கிற வாக்குறுதியுடன் புலியைக் கொல்லும் முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பிராந்திய அரசியலின் ஆதாயத்துக்காக, புலிகளைக் காக்க வேண்டிய அரசாங்கமும் அந்த முயற்சிக்குத் துணை நிற்கிறது. இதற்கிடையே பணியின் மீது உண்மையான பிடிப்பு கொண்டிருக்கும் வித்யா பாலன் அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்துக்கு மாற்ற முயல்கிறார். வித்யாவின் நேர்மையான முயற்சிகளுக்கு வரும் தடைகளும் அந்தத் தடைகளை அவரால் உடைக்க முடிகிறதா என்பதுமே 'ஷேர்னி'.

உரக்கப் பேசும் ஷேர்னி

மனிதனின் சுயநலத்தால் அழிந்து சுருங்கும் காடுகள், காட்டு விலங்குகளின் வழித்தடங்களில் அமைக்கப்படும் குடியேற்றங்கள், மனிதனின் பேராசையால் காடுகளுக்குள் திடீரென்று முளைக்கும் கனிமச் சுரங்கங்கள், மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் தவிக்கும் கால்நடைகள், காட்டு விலங்குகளைப் பாதுகாக்கும் அரசின் முயற்சிகளை நீர்த்துப் போகச்செய்யும் கேடுகெட்ட அரசியல், காட்டு நண்பர்கள் குழுவின் முன்னெடுப்புகள் என இந்தப் படம் பேசும் விஷயங்கள் ஆழமானவை. வீரியமானவை. இந்த காலகட்டத்துக்குத் தேவையானவை.

காட்டை எல்லையாகக் கொண்ட கிராமங்களில் வாழும் மக்கள் காட்டு விலங்குகளை எதிர்கொள்ள நேரிடுவதால் ஏற்படும் பிரச்சினைகளையும் அதற்கான காரணங்களையும் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் அவற்றைத் தவறாக அணுகும் அரசாங்கத்தின் போக்கையும் இந்தப் படம் எவ்வித மிகையுமின்றி உரக்கப் பேசியுள்ளது.

இயக்குநரின் திரை ஆளுமை

யாரும் பேசத் தயங்கும் விஷயம். யாரும் எடுக்கத் தயங்கும் கதைக்களம். திரைமொழியில் கொஞ்சம் சறுக்கினாலும், இது ஆவணப் படமாகவோ பிரச்சாரப் படமாகவோ மாறியிருக்கக்கூடும். ஆனால், படத்தின் இயக்குநர் அமித் மாசூர்கர் தான் கைவரப் பெற்றிருக்கும் அபாரத் திரைமொழி மூலமாகவும், நேர்த்தியான காட்சியாக்கம் மூலமாகவும் நமக்கு ஓர் உன்னதத் திரை அனுபவத்தை அளித்திருக்கிறார். ராகேஷ் ஹரிதாஸ் தன்னுடைய அசாத்திய ஒளிப்பதிவின் மூலம் நமக்குக் காட்டுக்குள் வாழும் உணர்வை ஏற்படுத்தித் தருவதால், நாமும் காட்டுக்குள் உலவாவுகிறோம், புலிகளைப் பின்தொடர்கிறோம்.

படம் உணர்த்தும் சேதி

வேட்டையாடுவதில் தனக்கு இருக்கும் நிபுணத்துவத்தை உணர்த்தும் நோக்கில் தான் இதுவரை கொன்று குவித்திருக்கும் புலிகளை சரத் சக்ஸேனா பட்டியலிடுவார். அப்போது, இதுவரை எத்தனை புலிகளை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள் என வித்யா பதில் கேள்வி கேட்பார். இந்த ஒற்றைக் கேள்வி நம்முள் எழுப்பும் அதிர்வலைகளிளில்தாம் இந்தப் படத்தின் ஆன்மா அடங்கியுள்ளது. இறுதியில் தன்னுடைய சக கிராமவாசிகள் பலருடைய உயிரைப் பறித்த ஆட்கொல்லிப் புலியின் குட்டிகளைக் காப்பாற்றி, உணவூட்டி வளர்க்கும் அந்தப் பெண்ணின் உன்னத முயற்சியே இந்தப் படம் நமக்கு உணர்த்தும் சேதி.

எது வீரம்?

விலங்குகளை அடக்கி ஆள்வதும் வேட்டையாடிக் கொல்வதும் வீரத்தின் அடையாளங்கள் என்கிற பொதுப் புத்தி நம்முடைய சமூகத்தில் ஆழமாகப் புரையோடி உள்ளது. இந்தக் கற்பிதங்களை நம்முடைய திரைப்படங்கள் காலங்காலமாகத் தூக்கிப் பிடிக்கின்றன. அவற்றை ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கும் கடத்துகின்றன. திரைப்படங்களின் இத்தகைய ஆரோக்கியமற்ற போக்குக்கு ஷேர்னி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. வீரம் குறித்த சமூகத்தின் தவறான புரிதலை மாற்றியமைத்து, உண்மையான வீரம் என்பது அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் அழிப்புகளுக்கும் உள்ளாக்கப்படும் நாதியற்ற காட்டுயிர்களைக் காக்க அணிவகுத்து நிற்பதில் இருக்கிறது என்கிற ஆழமான புரிதலை மக்கள் மனத்தில் விதைத்து, அவர்களின் எண்ணவோட்டத்தை இந்தத் திரைப்படம் ஆரோக்கியமாக மடைமாற்றி உள்ளது.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x