Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

திரை விமர்சனம்: வாழ்

மென்பொருள் துறையில், அன்றாட பணி அழுத்தங்களுக்கு நடுவே அல்லாடும் சராசரி இளைஞன் பிரகாஷ் (பிரதீப் அந்தோணி). அவனது வாழ்வில் எதிர்பாராமல் நுழையும் ஒரு பெண்ணுடனும் (பானு டி.ஜே) அவளது 6 வயது மகனுடனும் (அகரவ்) மேற்கொள்ளும் திடீர் பயணம், வாழ்வின் எதிர்பாராத தருணங்களை அவனுக்குப் பரிசளிக்கிறது. அதன் வழியாக, மனிதர்களிடமும் இயற்கையிடமும் பிரகாஷ் பெற்றுக்கொண்டதும், கற்றுக்கொண்டதும் என்ன என்பதுதான் கதை. ‘அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள 2-வது படம் இது.

ஒரு பயணத் திரைப்படத்துக்கான திரைக்கதையின் வழியே விரியும் புத்தம்புது காட்சிகள் புதிய திரை அனுபவத்தை தருகின்றன. மண விழாவுக்காக ஜோடிக்கப்பட்ட வீடு, எதிர்பாராத மரணத்தால் துக்க வீடாகிறது. அலுப்பும் சலிப்புமாக அங்கலாய்த்துக் கொண்டிருந்தவன், அங்கே தன் வாழ்க்கையைபுரட்டிப்போடும் பெண்ணை சந்திக்கும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர். அவள், மணமானவள் என்று அறியாது மையலுறும் அந்த ஒற்றைக் காட்சியின் உணர்வு, ஒட்டுமொத்த படத்தின் எதிர்பாராத் தன்மை எப்படி இருக்கப்போகிறது என்பதை தொடக்கத்திலேயே புரியவைத்துவிடுகிறது. அங்கே தொடங்கும் அந்தப் பயணத்தின் ஒவ்வொரு திருப்பமும் அட போட வைக்கின்றன.

வீட்டிலும், வெளியேயும் காதலின் பெயரால் படுத்தியெடுக்கும் இரு பெண்கள், மகனின் மீதான காதலில் சட்டென வெகுண்டதால் விளைந்த விபத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பிச் சிறகடிக்க நினைக்கும் யாத்ராம்மா, ‘நாளைக்கு.. நாளைக்கு..’ என்று கூறி, இன்றைக்கான வாழ்வை வாழ்வதன் பொருளை போதிக்கும் பொலிவியா தேசத்தின் தன்யா என பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியம் மட்டுமல்ல, இன்றைய பெண்ணுலகின் ஒரு பகுதி பிரதி பிம்பங்கள்.

நான்கு முதன்மை மற்றும் நான்கு துணைக் கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் போலித்தனமற்ற நேர்மையும், அவை நிஜ வாழ்வில் பேசும் வசனங்களும் ஈர்க்கின்றன. என்றாலும் இரண்டாம் பாதியில் சம்பவங்களின் போதாமையும், நகர்வு சற்று நிதானித்துச் செல்வதையும் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.

கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தொடங்கி, நடிகர்களின் அட்டகாசமான பங்களிப்பு, கதையோட்டத்தை தாங்கிப் பிடிக்கும் பிரதீப் குமாரின் இசை ஆகியவை சிறப்பு. ‘இன்ப திசை மான்கள் உலா போகுதே’ பாடல், துள்ளல் கலந்த எள்ளல் ரகம்.

வாழ்வின் நெருக்கடியில் இருந்து தப்பியோடும் கதாபாத்திரங்களைப் பின்தொடர்ந்து, இயற்கையின் கண்கள் போலிருந்து கண்காணிக்கும் ஷெல்லி காலிஸ்டின் ஒளிப்பதிவு, இயற்கையிடம் கொட்டிக்கிடக்கும் ஒலிகளை அப்படியே வாரிச் சுருட்டிக்கொண்டுவந்த ஒலிப்பதிவு என படத்தில் அனைத்து கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களின் கூட்டுழைப்பும் அபாரம்! அதை ஒருங்கிணைத்த இயக்குநர் அருண் பிரபுவின் கலையாளுமையை வியக்காமல் இருக்கமுடியவில்லை. தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு.

சக மனிதர்களிடமும், இயற்கையிடமும் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள், கதாநாயகனின் வாழ்க்கையை ஒரு சுய பரிசோதனைக் களமாக மாற்றிவிடுவது திரைமொழியின் முத்தாய்ப்பு.

இதைத் தாண்டி, இனம், மொழி, நிலம் ஆகிய எல்லைகளைக் கடந்துமனிதன் மேற்கொள்ளும் பயணம், அவனுடைய வாழ்க்கையை செழுமையாக்கக் கூடியது என்பதை, பெருந்தொற்றுக் காலத்தின் இறுக்கங்களுக்கு மத்தியில் பெரும் தரிசனமாகத் தருகிறது ‘வாழ்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x