

2015ஆம் ஆண்டு பாபி சிம்ஹா, கலையரசன் நடிப்பில் வெளியான படம் ‘உறுமீன்’. இப்படத்தை சக்திவேல் பெரியசாமி இயக்கியிருந்தார். தற்போது விதார்த் நடிக்கவுள்ள புதிய படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கவுள்ளார் சக்திவேல்.
இப்படத்தை ‘கொரில்லா’, ‘பார்டர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டி. விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். இப்படத்தில் விதார்த்துடன் கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இதில் இயக்குநர் சக்திவேல் பெரியசாமி பேசியதாவது:
இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஒரு படம். தற்காலத்திய பிரச்சனைகளை சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்களின் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் இருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்த போது, கமர்சியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் ஒரு நடிகர் தேவைப்பட்டார். அப்போது முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தரும்.
லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடலும் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்கக் கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில் சிறந்த படமாக அமையும். கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை, உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்கு பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.