Published : 16 Jul 2021 12:23 PM
Last Updated : 16 Jul 2021 12:23 PM

திரைத்துறை அழுத்தம் நிறைந்தது: ஸ்ருதிஹாசன் பகிர்வு

கரோனா காலகட்டத்தில் ஏற்படும் மன அழுத்தங்கள் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

''மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. நான் எப்போதும் ஒரு உதாரணம் சொல்வதுண்டு. நமக்கு வயிற்று வலி ஏற்பட்டால் முதல் நாள் ஓமம் அல்லது தயிர் சாப்பிடுவோம். காரமான பொருட்களைத் தவிர்த்து விடுவோம். இரண்டாவது நாள், மருந்து சாப்பிடுவோம். மூன்றாவது நாளும் வலி தொடர்ந்தால் மருத்துவரிடம் சென்று உதவி கேட்போம். அந்தத் தருணத்தில் நம் வீட்டில் இருப்பவர்கள் ‘நாங்கள் இருக்கும்போது எதற்கு டாக்டர்?’ என்று கேட்பார்கள்.

இந்தியக் குடும்பங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இதைத்தான் பார்க்கிறேன். குடும்ப சென்டிமென்ட் எனக்குப் புரிகிறது. ஆனால், மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காததுபோல தலையைத் தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமான நடத்தை. தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் புரிவதில்லை.

நான் ஒரு உளவியல் மாணவி. நான் கல்லூரியை விட்டுப் பாதியில் வெளியேறிவிட்டாலும் உளவியல் படிப்பைத் தொடர்ந்தேன். மனநல ஆலோசகர்கள் பலர் என் நண்பர்களாக இருக்கின்றனர். சிறு வயதிலும் இப்போதும் நான் மனநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆக்கப்பூர்வமோ அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம்''.

இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இது தவிர விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x