தெலுங்கில் ’ராட்சசன் 2’ அதிகாரபூர்வ அறிவிப்பு

தெலுங்கில் ’ராட்சசன் 2’ அதிகாரபூர்வ அறிவிப்பு

Published on

2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ’ராக்‌ஷஸுடு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ரமேஷ் வர்மா செவ்வாய்க்கிழமை இதற்கான போஸ்டரை வெளியிட்டார்.

2018ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’ராட்சசன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’ராக்‌ஷஸுடு’வில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸும், அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மா கதை, திரைக்கதை, இயக்கத்தில் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது. சாகர் மற்றும் ஸ்ரீகாந்த் விசா வசனங்கள் எழுதுகின்றனர். இன்னும் இந்தப் படத்தின் நடிகர் நடிகையர் குறித்து இறுதி செய்யப்படவில்லை. முன்னணி நட்சத்திரம் ஒருவர் கதாநாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஜிப்ரான் இசை, வெங்கட் சி திலீப் ஒளிப்பதிவு என முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தில் பணியாற்றவுள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த சத்யநாரயணா கோனேருவே இதையும் தயாரிக்கிறார்.

வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கசாப்பு கடைகளில் பயன்படுத்தப்படும், ரத்தம் தொய்ந்த கத்தி சங்கிலியில் தொங்குவது போலவும், கோட் அணிந்த உருவம் ஒன்று பிணத்தைத் தூக்கிச் செல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in