Published : 12 Jul 2021 12:46 PM
Last Updated : 12 Jul 2021 12:46 PM

நா.முத்துக்குமார் 46-வது பிறந்த நாள்: பறவையே எங்கு இருக்கிறாய்..?

கண்மூடித் திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே

குடையில்லா நேரம் பார்த்து கொட்டிப்போகும் மழையைப் போல

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே..

சென்னையில் ஓர் இரவில் பண்பலையில் இப்பாடலை நான் கேட்டதும் அடடா..! மெட்டுக்குள் கவிதை எவ்வளவு அழகாக சிம்மாசனம் இட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டேன். அதன்பின் நா.முத்துகுமார் என பாடலாசிரியரின் பெயரை பண்பலை அறிவிப்பாளர் சொல்லும்போதெல்லாம் மனசுக்குள் சாரல். இன்று கவிஞான இல்லாமல் ஒருவர் சினிமா பாடலாசிரியர் ஆகிவிடமுடியும். ஆனால், ஒரு கவிஞன் சினிமா பாடலாசிரியர் .ஆனால், திரைப்பாடல் கவிதையை ஆடையாக அணிந்துகொள்ளும் என்கிற நம் திரைப்பாடல் மரபை 2000-த்தில் புதுப்பித்த ஒரே பாடலாசிரியர் .நா.முத்துக்குமார் மட்டும்தான். அவரிடமே நான் உதவியாளனாக சேருவேன் என்று நினைக்கவில்லை.

காலம் ஊடுபாவு போன்றது! நம் வாழ்வின் நாட்களை அழகான ஒரு சேலையாகவோ வேட்டியாகவோ தோளில் அணியும் ஒரு துண்டாகவோ நெய்துகொண்டிருக்கிறது. சின்னச்சின்ன பிசிறுகளால் நாம் அவ்வப்போது வாழ்வின் தறியில் அவதியுற்றாலும் குளிருக்குத் தாங்கக்கூடிய ஒரு போர்வையாகவாவது நம்மை நெய்துவிடும், அதுபோன்றுதான் ஏதோ ஒரு முனையிலிருந்த சிறு பிசிறு நூலான நானும் நா.முத்துக்குமார் என்னும் பட்டுவேட்டியில் மின்னக்கூடிய ஒரு இழையாக மாறினேன்.

மலையின் உச்சியிலிருந்து விழுகிற அருவியில் நாம் போய் தலையைக்கொடுக்கும்போது முதலில் பொத்தென்று அடிபோல் விழும் நீர், தொடர்ந்து தாம் தலையைக் கொடுத்துக்கொண்டே இருந்தால் மெல்ல ஆரத்தழுவி உச்சிமோந்து உடலையும் உள்ளத்தையும் கழுவி நிலத்தை உழுதுபோட்டது போல் ஒரு கிளர்ச்சியால் உந்தித் தள்ளுமே அதேபோன்றுதான் நான் கவிஞரின் பாட்டு வரிகளால் ஈர்க்கப்பட்டு அவரின் அணிலாடும் முன்றிலில் ஒரு குட்டி அணிலாக வலம் வந்தேன்.

அருவியின் அடிதாங்க முடியாத கல்பாறைகள் அருவிநீர்ப் பட்டு பட்டு கல்பிசிறுகள் சிதறி வழுக்காம் பாறையாக மாறிப்போய் ஒரு மலையின் நீர்த்தடம் போலவே காலத்துக்கும் காட்சித் தரும், அதுபோன்று சிறு கல்லாக இருந்த நான் கவிஞரின் அலுவலகத்தில் இருந்த புத்தக இடிபாடுகளில் சிக்கிசிக்கி உள்ளங்கையில் உருளும் ஒரு கூழாங்கல்லாக மாறினேன்.

ஆறு வருடங்கள் கவிஞருடனான பயணத்தில் நான் கற்றவை பெற்றவை ஏராளம். முத்துகுமாரின் உதவியாளன் என்கிற காரணத்துக்காகவே இன்று இயக்குநர்கள் விஜய், ராம், பாலாஜி சக்திவேல் போன்ற உன்னதப் படைப்பாளிகளின் விரல்பிடித்துக்கொண்டு திரையுலகில் தொடர்ந்து பயணிக்க நா.முத்துக்குமார் மறைந்துபோனாலும் என்னைத் தாங்கும் தோணியாகிப்போன அற்புதத்தை என்னவென்று சொல்ல!?

குணம் வேறாய் மணம் வேறாய் திரியும் மனிதர்கள் மத்தியில் அன்பு ஒன்றே ஆணிவேராய் நின்றவர் கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதை உலகில் இன்றுவரை தொடர்ந்து பயணிப்பதால் அவர் மறைந்துவிட்டதாக எனக்குத் தோன்றவேயில்லை. ஆசிரியராக அவர் சொல்லச்சொல்ல ஒரு மாணவனாக நான் எழுதிய நாட்களுக்கு ஒரு திரையைப் போட்டு மூடிவிட்டு சற்றுத்தள்ளி நின்று சில பாடல்களைப் பார்க்கிறேன்.

“கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?

மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்.. நம் காதல் தடைகளைத் தாண்டும்”

என்று சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் துன்பப்பட்டு பிரிய நேரும் காதலர்களுக்காக அவர் எழுதிய வரிகள் இன்னும் வருகிற காலங்களில் காதலிக்கப்போகும் காதலர்களுக்கும் பெரும் ஊக்கத்தைத் கொடுத்துக்கொண்டேயிருக்கும்.

வறுமையின் கொடும் கரங்களில் சிக்கி, வாழ்க்கையில் எண்ணற்ற உறவுகள் நம்மை விட்டு பிரிந்து எங்கெங்கோ தூரத்தேசத்தில் சிக்குண்டு சிதறி வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடும். அவ்வாறான உறவுகளில் ஊருலகம் அறியாத ஒரு காதலன் ஒரு காதலி தங்களது சொல்லப்படாத காதலில் இருந்து அவர்கள் ஒரு மாமங்கம் கழித்து ஏதோ ஒருநாளில் அறிமுகம் இல்லாத ஏதோவொரு நிலத்தில் சந்திக்க நேரும்போது மனம் இவ்வாறு குமுறியழும்.

“ஏழை காதல் மலைகளில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்

மண்ணில் விழுந்துமொரு காயமின்றி உடையாமல் உருண்டோடும் நதியாகிடுமோ..?

இதோ இதோ இந்த பயணத்திலே இதுபோதும் கண்மணி

வேறென்ன நானும் கேட்பேன் – பிரிந்தாலும்

மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்.

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா..-என்

தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?

-என்று அந்தத் துயரம் தோய்ந்த காதலர்களின் வலியை உணர்ந்து அவர்களை ஆறுதல் படுத்துவதற்காக இவ்வரிகளை எழுதிச்சென்றுள்ளார் கவிஞர்.

அம்மாக்களின் தியாகங்களைப் பற்றியே எங்கும் எதிலும் கேட்டுக்கொண்டிருந்த நமக்கு.. அப்பாவின் தியாகங்கள் பற்றிய ஒரேஒரு பாடலின் மூலம் நம் அனைவரையும் அப்பாவின் பிள்ளையாக உருகவைத்தார்.. அப்பாக்களின் மீதிருந்து கோபங்களை உதற வைத்தார்.

“தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..

-என்கிற பாடலின் வரிகள் வெறுமனே கற்பனையில் எழுதப்பட்டவை அல்ல. ஏனென்றால் கவிஞரின் அப்பா ஒரு தமிழாசிரியர். ஆயிரக் கணக்கில் புத்தகங்களைச் சேகரித்து ‘அன்னை என்கிற பெயரில் நூலகம் ஒன்றை நடத்தி வந்தவர். ’ஒரு மூட்டைப் புத்தகத்தை யாராவது தருகிறார் என்றால் என்னையும் விற்றுவிடுவார் என் அப்பா!’ என்று தனது தந்தையைப் பற்றிக் கவிஞர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். தனது தந்தை தேடித்தேடி சேகரித்தப் புத்தகங்களைப் படித்துதான் மாபெரும் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் தனிப்பெரும் ராஜபாட்டை அமைத்தார் நா.முத்துகுமார்.

2007-ல் கவிஞரின் அப்பா நாகராஜன் மறைந்துபோனார். அப்போது காஞ்சிபுரத்தில் அவர் வீட்டிலிருந்த நூலகத்தை கவனிக்க யாருமில்லாததால் அந்த நூல்களை எல்லாம் எடுத்துவர சென்னையிலிருந்து காஞ்சிபுரம் சென்றோம், அன்றிரவு கவிஞரின் வீட்டு மொட்டை மாடியிலே ஒரு பாயைப் போட்டு படுத்துக் கொண்டோம். தூங்குவதற்கு முன் கவிஞர் என்னிடம் சொன்னது எப்போது நினைத்தாலும் மனதை சட்டென்று உருக்கிவிடும் வார்த்தைகள்.

“தம்பி என்னோட சின்ன வயசிலயே அம்மா இறந்துட்டாங்க, அம்மா ஞாபகம் வந்துட்டா.. அடிக்கடி இந்த மொட்டை மாடிக்கு வந்துடுவேன்.. தீபாவளி பொங்கல்னா எல்லா குழந்தைகளும் அவங்களோட அப்பா அம்மா கூட சந்தோசமா இருப்பாங்க.. அந்த வயசுல அது ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்போ நெறைய பாடல்களைக் கேட்பேன், குறிப்பா எனக்கு ஆறுதல் சொல்லக்கூடிய பாடலொன்றை இசைஞானி பாடியிருந்தார் ,

‘ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக்கேட்டே தூங்கும் ஆவாரம்பூவே...’ - என்ற அந்தப் பாடலில் வரக்கூடிய ‘தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு. அமுதே என் கண்ணே பசும்பொண்ணே இனி துன்பம் ஏன் இங்கு’ – என இசைஞானி எனக்காகவே பாடியதாக நெனச்சிக்கிட்டு அந்த பாடலை எங்க போட்டாலும் நின்னுக் கேட்டுக்கிட்டு இருப்பேன் தம்பி. அதேமாதிரி.. ‘மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றுமுண்டு - தாயை இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றும் இல்லை’ – என்கிற வரிகள் என் ஆழ்மன வலியைக் கண்ணீராக கரைத்து வெளியேற்றும் ஒரு மருந்தாகவே எப்போதும் இருக்கிறது தம்பி” என்று அந்த இரவில் என்னிடம் சொன்னது நேற்றிரவு சொன்னது போலவே ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

தனது தந்தையின் அரவணைப்பிலும் அவர் சேகரித்து வைத்திருந்த புத்தக்கங்கள் தந்த அறிவாலும் ‘முதுகலையில் தமிழ் இலக்கியம் படி’ என்று அப்பா சொன்னதற்காகப் படித்து பெற்ற தமிழ் சங்க இலக்கிய பரிச்சயத்தாலும் திரையுலகில் தனித்து விளங்கிய கவிஞர், தனது தந்தைக்கு எழுதிய மலரஞ்சலியாகவே ”தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே” என்கிற பாடலைப் பார்க்கிறேன்.

தனது தாயின் மீது தீராத அன்பு கொண்ட கவிஞர் ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தில் ‘நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்.. உன்னால்தானே நானே வாழ்கிறேன்.. உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்.. எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே.. எரியும் கடிதம் எதற்குப் பெண்ணே!”

என்ற பாடலைத் தன் அம்மாவிற்காக எழுதினார் என்பது பலரும் அறியாத ஒன்று. அதிலும் ’அம்மா என்கிற கடிதம் என்னவென்று நான் படிக்கும் முன்னமே எரிந்துபோனதே’ நான் என்னாவேன் என்று உருகியிக்கிறார்.

குடும்பத்தின் அனைத்து உறவுகளையும் தன் பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் அண்ணனுக்கு இன்று நாற்பத்தாறாவது பிறந்த தினம்.. அவரைப் பார்த்து ‘ பறவையே எங்கு இருக்கிறாய்…?’ என்று கேட்கத் தோன்றுகிறது.. என்றாலும் அவரது வரிகள் ஒலிக்கும் காற்றின் வெளிகள் என்றும் அவர் கலந்திருக்கிறார் என்கிற ஆறுதலுடன் இப்போதைக்கு முடிக்கிறேன்.

வேல்முருகன்

- கட்டுரையாளர், பாடலாசிரியர், உதவி இயக்குநர்.

தொடர்புக்கு: mabel.velmurugan@gmail.com

தவறவிடாதீர்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x