Published : 07 Jul 2021 07:48 PM
Last Updated : 07 Jul 2021 07:48 PM

என் ஆதர்ச நாயகனின் ஆதர்ச நாயகன்: திலீப் குமார் மறைவுக்கு அபிஷேக் பச்சன் இரங்கல்

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு நடிகர் அபிஷேக் பச்சன் இரங்கல் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்தத் தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திலீப் குமாரின் மறைவுக்கு இந்தியத் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

"ஆக்ரி முகல் என்ற படம்தான் எனது முதல் படமாக இருக்க வேண்டியது. திலீப் குமார்தான் அந்தப் படத்தில் எனது தந்தையாக நடிக்க வேண்டியிருந்தது. எனது ஆதர்ச நாயகனுடன் சேர்ந்து நடிக்க எனக்கு 10 வருடங்கள் ஆனது என்றும், ஆனால், உனது முதல் படத்திலேயே அவருடன் நடிக்கும் கவுரவம் கிடைத்திருக்கிறது என்றும் என் அப்பா என்னிடம் சொன்னது இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது.

இந்த வாய்ப்பை நன்றாக ரசித்துப் பயன்படுத்தி முடிந்தவரை அவரைப் பார்த்துக் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். எனது ஆதர்ச நாயகனின் ஆதர்ச நாயகனுடன் நான் நடிக்கும் படம். எவ்வளவு அதிர்ஷ்டம் பாருங்கள். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. உயர்ந்த திலீப் குமாருடன் நான் நடித்தேன் என்று சொல்லும் கவுரவம் எனக்குக் கிடைக்கவேயில்லை.

இன்று ஒரு சினிமா சகாப்தமே நிறைவுக்கு வந்திருக்கிறது. ஆனால், இன்னும் பல தலைமுறைகள் அவரைப் பார்த்துக் கற்கலாம். முக்கியமாக திலீப்பின் அளப்பரிய திறமையை ரசித்து, மரியாதை செலுத்தலாம். எங்களை உங்கள் நடிப்பின், அறிவு, திறமை, அன்பின் மூலம் ஆசிர்வதித்ததற்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்.

உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். சாய்ராவுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று அபிஷேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x