Published : 07 Jul 2021 03:55 PM
Last Updated : 07 Jul 2021 03:55 PM

தமிழக முதல்வரின் முன்னெடுப்பு: நாசர் நன்றி

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக தமிழக முதல்வரின் முன்னெடுப்பிற்கு நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு எதிராகத் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், திரையுலகினர் சார்பில் தமிழக முதல்வரைச் சந்தித்து வேண்டுகோளும் விடுத்தனர். உடனடியாக ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்புக்கு நாசர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"சமுதாய முன்னேற்றத்திற்குத் திரைப்படங்கள் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தின்போது அக்காலத் திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவச் செய்ததற்கான சாட்சிகள் கருப்பு, வெள்ளைப் படங்களாக இன்றும் காணக் கிடைக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் சமுதாயத் தீர்வைக் கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன. இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துகளை முடக்கும் வண்ணமாய் இருக்கிறது.

தமிழக மக்களின் பிரதிநிதியாய் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாகக் கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடையச் செய்வதாக இருக்கிறது. அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது நம் கடமை. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்".

இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x