Published : 06 Jul 2021 09:43 PM
Last Updated : 06 Jul 2021 09:43 PM

இயக்குநர், நடிகர் சிங்கம்புலி பிறந்தநாள் ஸ்பெஷல்: திரைமறைவிலும் திரையில் தோன்றியும் அசத்திய கலைஞன் 

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் பின்பு நடிகராகவும் ரசிகர்கள் மனங்களில் தடம் பதித்த சிங்கம்புலி இன்று (ஜூலை 6) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, பாலா என தமிழ் சினிமாவின் பல ஜாம்பாவன்களை அளித்த தேனி பகுதியில் பிறந்தவர் சிங்கம்புலி. பெங்களூரில் படித்து பொறியியல் பட்டதாரியானார். இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

’உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி-கார்த்தி-ரம்பா-கவுண்டமணி கூட்டணியில் உருவான ‘உனக்காக எல்லாம் உனக்காக’ திரைப்படத்துக்கு வசனம் எழுதினார் சிங்கம்புலி. அந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது.

சுந்தர்.சி.இயக்கத்தில் அஜித்-மாளவிகா நடித்த ‘உன்னைத் தேடி’ திரைப்படத்தின் ஒன்லைனை பரிந்துரைத்ததோடு வசனமும் எழுதினார். அந்தப் படம் வெற்றிபெற்றதை அடுத்து சிங்கம்புலி இயக்கத்தில் அஜித் நடித்த படம்தான் ‘ரெட்’. அடுத்ததாக சூர்யா-ஜோதிகா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்த ‘பேரழகன்’ படத்துக்கு வசனம் எழுதினார் சிங்கம்புலி. அதைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்த ‘மாயாவி’ திரைப்படத்தை இயக்கினார்.

’ரெட்’ செண்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் படமாக அஜித் ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ‘மாயாவி’ கலகலப்பான நகைச்சுவைப் படமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்க வைத்தது.

ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘ரேனிகுண்டா’ திரைப்படத்துக்கும் சிங்கம்புலி வசனம் எழுதினார்.

பாலாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக அவர் இயக்கத்தில் 2009இல் வெளியாகி இரண்டு தேசிய விருதுகளை வென்ற ‘நான் கடவுள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார் சிங்கம்புலி. அதன் பிறகு அதே ஆண்டில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் வயதுக்கேற்ற மன வளர்ச்சி இல்லாத அப்பாவி மனிதராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் சிங்கம்புலி.

கிராமத்துப் பின்னணியில் தந்தை-மகன் பாசத்தையும் சகோதர உறவுகளையும் முன்வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் தன் தந்தையாலும் உடன்பிறந்த சகோதரர்களாலும் ஜென்மப் பகையாளியாகக் கருதப்படும் சித்தப்பா மற்றும் பங்காளி சகோதரர்களுடன் பாசப்பிணைப்புடன் இருப்பவராக சிங்கம்புலி நடித்திருந்த விதம் அவரை ஒரு கவனத்துக்குரிய துணை நடிகராக அடையாளப்படுத்தியது. ’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து ’கோரிப்பாளையம்’, ‘மிளகா’, ‘தூங்காநகரம்’, ’எத்தன்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டிஒலிப்பெருக்கி நிலையம்’, உள்ளிட்ட கிராமம் மற்றும் சிறுநகர பின்னணியில் எடுக்கப்பட்ட பல படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள துணைக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

குறிப்பாக எழில் இயக்கத்தில் ‘மனம்கொத்திப் பறவை’, ’தேசிங்கு ராஜா’ திரைப்படங்களில் சிங்கம்புலியின் நகைச்சுவை நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தன.

‘தேசிங்கு ராஜா’ படத்தில் தனக்கு ஏற்படப்போகும் ஆபத்தை சற்றும் உணராமல் விசேஷ நிகழ்வுப் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு ‘பாயாசம் எங்கடா’ என்று அப்பாவித்தனமாக கேட்கும் காட்சி சிங்கம்புலியின் நகைச்சுவை நடிப்பு, அதற்கு பொருத்தமான உடல்மொழி, முகபாவங்கள், வசன உச்சரிப்பு, டைமிங் என ஆகியவற்றை படம்பிடித்துக்காட்டும் கச்சிதமான சித்திரமாக அமைந்தது. ‘பாயாசம் எங்கடா” என்று கேட்கும் வெள்ளை வேட்டி-சட்டை அணிந்த சிங்கம்புலியின் இமேஜ் மிகப் பிரபலமான மீம் மெட்டீரியலாகவும் உருவெடுத்தது.

கிராமப்புற, சிறுநகரப்படங்களில் மட்டுமல்லாமல் பெருநகரப் பின்னணி கொண்ட படங்களிலும் சிங்கம்புலி கவனம் ஈர்த்திருக்கிறார். மணி கண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் பணியிடை நீக்கத்தில் இருக்கும் காவலராக இருந்துகொண்டே வீட்டுத் தரகராகவும் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கும் நிறுவனத்துக்கு ஆள்பிடித்துக்கொடுப்பவராகவும் நகர்ப்புறத்தில் இதுபோல் திரைமறைவில் இயங்கும் தரகர்களை கச்சிதமாகத் திரையில் உலவவிட்டிருப்பார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த த்ரில்லர் திரைப்படத்தில் கண் பார்வையற்ற நாயகனின் உதவியாளராக மட்டுமல்லாமல் உடன்பிறவா சகோதரனைப்போல் இருந்து கடைசியில் பரிதாபமாக உயிர்விடுபவராக நடித்து சீரியஸ் நடிப்பிலும் தனக்கிருக்கும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

உதவி இயக்குநர். வசனகர்த்தா, இயக்குநர் ஆகிய திரைமறைவு பணிகளாலும் ஒரு கட்டத்துக்குப் பின் திரையில் தோன்றும் துணை நடிகராகவும் எடுத்துக்கொண்ட பணிகளிலெல்லாம் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துவரும் சிங்கம்புலியின் திரைப்பயணம் இன்னும் பல ஆண்டுகளுக்குத் வெற்றிகரமாகத் தொடர வேண்டும் திரைத் துறையில் அவர் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x