Published : 01 Jul 2021 13:42 pm

Updated : 01 Jul 2021 13:42 pm

 

Published : 01 Jul 2021 01:42 PM
Last Updated : 01 Jul 2021 01:42 PM

குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவைத்த வசூல் சக்கரவர்த்தி விசு!  - இயக்குநர் விசு பிறந்தநாள் இன்று

visu-birthday

தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு, திரையுலகில் பட்டொளி வீசிப் பறந்த கலைஞர்கள் ஏராளம். ஒரு வீட்டில் உள்ள எல்லா வயதினரும் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்க வைப்பதையே தன் பாணியாகவும் கதையாகவும் கட்டமைப்பாகவும் வைத்துக் கொண்டு ஜெயித்த இயக்குநர்களில் முக்கியமானவர்... விசு.

நாயகனைச் சுற்றியுள்ள கதையை, சினிமாவாக்கிக் கொண்டிருக்கும் காலம்தான் இப்போது. அந்த நாயகனைச் சுற்றி மட்டுமே கதை பண்ணுவது அதிகரித்துவிட்டது. ஆனால் விசுவின் படங்கள் அப்படியல்ல. அவை நாயகனைச் சுற்றிய கதையாக இருக்கவில்லை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தருகிற விதமாக படமெடுக்கவில்லை. நாயகனையும் குடும்பத்தையும் பிரித்துக் கதை பண்ணவில்லை. விசு படத்தில் கதையின் நாயகன்... கதை தான்!


கதையை மட்டுமே நம்பி, களத்தில் இறங்கிய இயக்குநர்களில் விசுவும் ஒருவர். எழுபதுகளில், நாடகத் துறைக்குள் நுழைந்து, தன் எழுத்துத் திறமையால், தனித்ததொரு அடையாளத்தைக் கொண்டிருந்தார். அவரின் கதைகளுக்கு வசனங்கள் பெரிதும் உதவின. நாடக மேடையில், கரவொலிகள் கிடைத்துக் கொண்டே இருந்தன. அப்படி கைதட்டி, ரசித்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் கே.பாலசந்தர். விசு திரைத்துறைக்குள் நுழைந்தார். பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.

விசுவின் எழுத்து மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார் பாலசந்தர். தான் இயக்கிய ‘தில்லுமுல்லு’ படத்துக்கு அவரை எழுதவைத்தார். பாலசந்தர் தான் எழுதாமல், பிறரின் வசனத்தை வாங்கியது அரிதினும் அரிதான ஒன்று. அந்த அரிது இங்கே அரங்கேறக் காரணம்... விசுவும் அவரின் திறமையும்!

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் நடிகராகவும் அறிமுகமானார் விசு. இதுவும் அவரின் நாடகம்; அவரின் எழுத்து. இதிலும் காட்சிக்குக் காட்சி வெளிப்பட்டன; கைத்தட்டல்கள் குவிந்தன.

ஒரு குடும்பத்துக்குள் சின்னதாக வரும் பிரச்சினை. லேசாக ஏற்படும் சிக்கல். இதை ஊதிப்பெரிதாக்கி, பிரச்சினைக்கு தீர்வு காண்பதும், சிக்கல்களுக்கு சிடுக்கெடுப்பதும் விசு ஸ்டைல் என உருவானது. திருமணத்துக்கு எட்டுக் கட்டளைகள் போட்ட கிட்டுமணி கூட அவற்றையெல்லாம் மறந்திருப்பார். ஆனால் கிட்டுமணியின் கண்டீஷன்களையும் ‘மணல் கயிறு’ படத்தையும் முக்கியமாக நாரதர் நாயுடுவையும் இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
‘மணல் கயிறு’ தந்த வெற்றிதான் அடுத்தடுத்த படங்களையும் பாணியையும் தந்தது விசுவுக்கு.

மாஸ் ஹீரோ பலத்தையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார் விசு. எஸ்.வி.சேகர், திலீப், இளவரசன், ரவி ராகவேந்தர், சந்திரசேகர், பாண்டியன், நிழல்கள் ரவி என்று கதையும் மினிமம் பட்ஜெட் கதையாக இருக்கும். நடிகர்களும் அப்படியே இருப்பார்கள். ஆனால் கலெக்‌ஷன் மட்டும், பிரமாண்டமான படம் தரும் வசூலைக் குவித்தது. அதுதான் விசுவின் மேஜிக்.

கணவனுக்கும் மனைவிக்கும், அம்மாவுக்கும் பிள்ளைக்கும், அப்பாவுக்கும் மகனுக்கும், மாமியாருக்கும் மருமகளுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்குமாக நடக்கிற சின்ன விஷயமே, சிறிய அளவிலான பிரச்சினையே படத்தின் கதைக்குப் போதுமானது என்பதில் உறுதியாக இருந்து, அதில் வெற்றியும் பெற்றார் விசு. ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாக்யராஜ் வரிசையில் மக்களின் மனங்களை புரிந்து உணர்ந்து படமெடுப்பதில் வல்லவராகப் பேரெடுத்தார். குடும்பம் மொத்தத்தையும் தியேட்டருக்கு வரவைக்கிற வித்தையை அறிந்துவைத்திருந்தார்.

‘பொண்ணுக்கு கல்யாணம் நடக்க எந்தப் பொய்யையும் சொல்லத் தயார்’ என்றிருக்கிற கமலாகாமேஷ்கள் நம்மூரிலும் இருக்கிறார்கள். ‘பொண்ணு இப்படித்தான் வேணும்’ என்று கட்டளைகளை லிஸ்ட் போடுகிற எஸ்.வி.சேகர்களும் உண்டு. மகனின் ‘லவ் மேரேஜை’ மறைக்கிற குடும்பங்கள் இருக்கின்றன. ‘நான் பாத்துக்கறேன், எல்லாத்தையும் நான் சரி பண்றேன்’ என்று சொல்லும் நாரதர் நாயுடுகளாக, சித்தப்பாக்களோ பெரியப்பாக்களோ, நாலு வீடு தள்ளி இருக்கும் தெரிந்தவர் அறிந்தவரோ இருப்பார்கள். ‘மணல் கயிறு’ பார்த்துவிட்டு, இப்படி பொருத்திப்பார்த்த ரசிகர்களால்தான் மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்தார் விசு.

‘சிதம்பரம், சிவா, பாரதி, சரோஜினி’ என்று ஒரு படத்தின் கேரக்டர்களின் பெயர்களை மனதில் பதியவைத்த மாயக்காரர்தான் விசு. காவிரி, யமுனா, சரஸ்வதி என்று பெயர்வைத்ததைக் கடந்து ‘கோதாவரி’ எனும் பெயரை மிகப்பெரிய ஹிட்டாக்கினார். அந்தக் கதாபாத்திரங்களுக்குள் நம் உறவுகளை உலவவிட்டதுதான் குடும்ப இயக்குநர் என்கிற பட்டத்தை விசுவுக்கு நம்மை கொடுக்கவைத்தது.

படத்தின் கதை, படம் ஓடத்தொடங்கிய கால்மணி நேரத்தில், எதை நோக்கி நகரும் படம் இது என்று ரசிகர்களுக்குத் தெரிந்துவிடவேண்டும் என்பார்கள். ஆனால், ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘திருமதி ஒரு வெகுதிமதி’ படங்களில் கையில் இருக்கும் சீட்டுகளைக் காட்டவில்லை விசு. அது, விசுவின் ரசிகர்களுக்குத் தேவைப்படவும் இல்லை. காட்சிகளையும் காட்சிகளை வீரியப்படுத்துவதற்கான வசனங்களையும் விசுவின் ஆக்கிரமிப்பு நடிப்பும் சேர்ந்து, எதையும் யோசிக்கவிடாமல் படம் பார்க்க வைத்தன.

கூட்டாக இருக்கிற மாமியார் - மருமகள், அண்ணனை மதிக்கிற தம்பி, அப்பாவை கேள்வி கேட்கிற மகன், அந்த அப்பாவின் தோள்பாரத்தைச் சுமக்க நினைக்கிற மகன், காதலித்தவனைக் கல்யாணம் செய்துகொள்கிற தங்கை, தம்பியின் படிப்புக்காக தாம்பத்யம் துறக்கிற அண்ணன், இதனால் கோபம் கொள்கிற மனைவி, கணக்குப் பார்க்கிற மகன், பணத்தைத் திருப்பிக் கேட்கிற மகன், அதனால் பிரிவது, தன்னையும் மீறி மருமகளைப் பார்த்ததால் மனைவியுடன் பேசாமல் இருக்கும் கணவன்... என இந்தக் கேரக்டர்களில் இரண்டுபேராவது, நம் குடும்பத்திலோ நம் தெருவிலோ இருந்திருப்பார்கள்.

‘அந்த 7 நாட்கள்’ படத்தின் க்ளைமாக்ஸில், பாலக்காட்டு மாதவனும் வசந்தியும் சேர்ந்துவிடவேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் க்ளைமாக்ஸ் வேறு. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், ‘சரியான க்ளைமாக்ஸ்’ என்று கொண்டாடினார்கள். அப்படித்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்திலும் நிகழ்ந்தது. ‘ரெண்டுபட்ட குடும்பமும் ஒன்றாகவேண்டும் என்பதுதான் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பதைபதைப்பு. ஆனால் க்ளைமாக்ஸ் வேறு. ‘அட ஆமாம்பா... சரியான முடிவு இதுதாம்பா’ என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தார்கள் ரசிகர்கள். இப்படி ஏங்கவைத்ததும் சரியென்று சொல்லவைத்ததும்தான், விசுவின் டைரக்‌ஷன் டச். ‘குடும்ப இயக்குநர்’ எனும் அந்தஸ்தை விசுவுக்குக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் ரசிகர்கள். ‘குடும்பத்துடன் காண வேண்டிய படம்’ என்று பார்த்த ரசிகர்கள், பார்க்காத ரசிகர்களுக்குச் சொன்னார்கள்.

அக்காவின் அரவணைப்பில் வளர்ந்த இரண்டு தம்பிகள். அக்காவுக்கு பதில் சித்தி, பெரியப்பா, பெரியம்மா என்றெல்லாம் அவரவர் வாழ்க்கையுடன் பொருத்திக் கொண்டுதான் ‘திருமதி ஒரு வெகுமதி’யைப் பார்த்தார்கள் மக்கள்.

ஒரு கதையை எழுதுவது என்பது ஒருவிதம். அதற்கு வசனம் மட்டும் எழுதிக் கொடுப்பது என்பது இன்னொரு விதம். கதையைச் சரி பண்ணிக் கொடுப்பது என்பது மூன்றாவது விஷயம். கலைஞானம், பஞ்சு அருணாசலம் போல், இதிலும் கைதேர்ந்தவர் விசு. ஏவிஎம், முக்தா பிலிம்ஸ் உள்ளிட்ட எத்தனையோ நிறுவனங்கள், ‘கதைல குழப்பமா? கூப்பிடு விசுவை’ என்று அழைத்தது. சரி செய்துகொடுத்தார். ஹிட்டாக்கிக் கொடுத்தார்.

‘உறவுக்கு கை கொடுப்போம்’ எனும் இவரின் நாடகம், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில், ஒய்.ஜி.மகேந்திராவின் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. படுதோல்வியைச் சந்தித்தது. இதே கதையை சில வருடங்கள் கழித்து, சினிமாவுக்குத் தக்கபடி கொண்டு வந்தார் விசு. நடித்தார். இயக்கினார். மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றார். அதுதான் ‘சம்சாரம் அது மின்சாரம்’. எல்லோருமே வியந்துதான் போனார்கள்.

அப்படித்தான் இவரின் கதை வசனத்தில், ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த் நடித்து, துரை இயக்கிய ‘சதுரங்கம்’ வந்தது. பயந்த சுபாவமுள்ள அண்ணன் கெட்டவனாகிறான். சேட்டைகள் பண்ணிக் கொண்டிருந்த தம்பி நல்லவனாகிறான். வாழ்க்கை ஆடுகிற சதுரங்க ஆட்டம். படம் பெரிதாகப் போகவில்லை. ஆனால் இந்த தன் கதையை, மீண்டும் பட்டி, டிங்கரிங் பார்த்தார். சினிமா களத்துக்கு மாற்றினார். நல்ல குணம் கொண்ட அண்ணன் எஸ்.வி.சேகர் கெட்டவனாவார். சேட்டைகள் செய்த தம்பி பாண்டியன் வெற்றி பெறுவார். ‘திருமதி ஒரு வெகுமதி’யாக்கினார் விசு.

’டெளரி கல்யாணம்’, ‘சிதம்பர ரகசியம்’, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘வரவு நல்ல உறவு’, பெண்மணி அவள் கண்மணி’ என்று விசு எடுத்ததில் பெரும்பான்மையாக குடும்ப சப்ஜெக்ட் என முத்திரையுடனே வந்தன.

‘இன்றைக்கு டிவியில் போட்டாலும் பார்க்கலாம்’ என்கிற டாப் டென் படங்களில் விசுவும் படங்களும் இருக்கின்றன.

இன்றைக்கு ‘டாக் ஷோ’ பண்ணாத தொலைக்காட்சிகளே இல்லை. அதற்கு ஒரு ரூட் போட்டுக் கொடுத்து, அதற்கு ஒரு கம்பீரமும் மரியாதையும் ஏற்படுத்திக் கொடுத்த ‘அரட்டை அரங்கம்’, ‘மக்கள் அரங்கம்’ நிகழ்ச்சிகளை இன்னமும் மறக்கவில்லை ரசிகர்கள்.

கருப்பு வெள்ளைக் காலம் தொடங்கி, கரோனா லாக் டெளன் காலத்துக்கு முந்தைய வார வெள்ளிக்கிழமை வரை, பட விளம்பரங்களில், ‘குடும்பத்துடன் காண வேண்டிய திரைப்படம்’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. அப்படி ‘குடும்பத்துடன் காணவேண்டிய படம்’ என்று தைரியமாகப் போட்டு விளம்பரம் செய்யும் வகையில் தொடர்ந்து தன் படங்களைக் கொடுத்தவர் விசுவாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு முறை விசுவின் படம் பார்க்கப்படுகிற போதும், புதிதாகப் பிறந்துகொண்டே இருப்பார் விசு.

குடும்பச்சித்திரங்களைத் தந்த அற்புதக் கலைஞன் விசுவைப் போற்றுவோம்!

இன்று நடிகரும் இயக்குநருமான விசுவுக்கு (ஜூலை 1ம் தேதி) பிறந்தநாள். 76வது பிறந்தநாள்.தவறவிடாதீர்!

குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவைத்த வசூல் சக்கரவர்த்தி விசு!  - இயக்குநர் விசு பிறந்தநாள் இன்றுகுடும்பப் படம்குடும்பக் கதைவிசுபாலசந்தர்தில்லுமுல்லுசம்சாரம் அது மின்சாரம்மணல் கயிறுகுடும்பம் ஒரு கதம்பம்திருமதி ஒரு வெகுமதிசதுரங்கம்உறவுக்கு கை கொடுப்போம்நடிகர் விசுஅரட்டை அரங்கம்மக்கள் அரங்கம்VisuDirector visuSamsaram adhu minsaramBalachanderThillumulluVisu birthdayJuly 1 visu birth day

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x