Published : 29 Jun 2021 16:12 pm

Updated : 29 Jun 2021 20:07 pm

 

Published : 29 Jun 2021 04:12 PM
Last Updated : 29 Jun 2021 08:07 PM

'தர்மயுத்தம்' வெளியான நாள்: கமலின் அண்ணன் இயக்கிய படத்தில் நாயகனாக ரஜினி! 

dharma-yuddham-release-date-special-article

சென்னை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்பக் கால வெற்றிப் படங்களில் ஒன்றான 'தர்மயுத்தம்' வெளியாகி இன்றோடு (ஜூன் 29) 42 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1978இல் வெளியான 'பைரவி' ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். சிறிய கதாபாத்திரம். வில்லன், குணச்சித்திர நடிகர், இரண்டாவது கதாநாயகன் என்று படிப்படியாக வளர்ந்து முதன்மைக் கதாநாயகன் என்னும் அந்தஸ்தை மூன்றே வருடங்களில் அடைந்திருந்தார் ரஜினி. அந்த ஆண்டில் காவிய அந்தஸ்தைப் பெற்ற மகேந்திரனின் 'முள்ளும் மலரும்', கே.பாலசந்தரின் 'தப்புத் தாளங்கள்' உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை நாயகனாக தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையையும், தனித்துவமான ஸ்டைலையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்துவிட்டார்.


1978-80 ரஜினி கதாநாயக நடிகராக தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொண்ட காலகட்டம். அவர் ஒரு வணிக மதிப்புமிக்க நாயக நடிகராக நிலைபெற உதவிய முக்கியமான படங்களில் ஒன்று 'தர்மயுத்தம்'. மாறுபட்ட கதைகள், துணிச்சலான கருப்பொருட்களுக்காக தனி கவனம் பெற்றவர் இயக்குநர் ஆர்.சி.சக்தி. கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்; உடன்பிறவா அண்ணன் என்றுதான் கமல் அவரை எப்போதும் குறிப்பிடுவார். 'உணர்ச்சிகள்', 'மனிதரில் இத்தனை நிறங்களா' ஆகிய தன்னுடைய முதல் இரண்டு படங்களில் கமலை முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த அவர் மூன்றாவது படத்தில் ரஜினியை நாயகனாக்கியது தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத சுவாரஸ்யங்களில் ஒன்று.

'மனிதரில் இத்தனை நிறங்களா'வில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு முன்பே சில படங்களில் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடி இணைந்து நடித்திருந்தாலும் அந்த இணை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது இந்தப் படத்தின் மூலமாகத்தான். இதற்குப் பிறகு 'ஜானி', 'போக்கிரி ராஜா','தனிக்காட்டு ராஜா', 'அடுத்த வாரிசு' எனப் பல படங்களில் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக லட்சுமிஸ்ரீ நடித்தார்.

மனிதர்களைக் கொன்று அவர்களின் கண்களையும் மற்ற உடல் உறுப்புகளையும் பணத்துக்கு விற்கும் கொள்ளைக் கூட்டம் ரஜினியின் ஒரே அன்புத் தங்கையைக் கொன்றுவிடும். அதற்காக அவர்களைப் பழிவாங்குவார் ரஜினி. இதுதான் படத்தின் மையச் சரடு. அண்ணன் – தங்கை பாசம், காதல், ஆக்‌ஷன் என வெகுஜன சினிமாவுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை படத்தின் வெற்றிக்கு முதன்மைப் பங்காற்றியது. பெளர்ணமி இரவுகளில் மட்டும் சங்கிலியில் கட்டிவைக்க வேண்டிய அளவு நாயகனுக்குக் கட்டுப்படுத்த முடியாத வெறி ஏற்படுவது போன்ற உளவியல்/அமானுஷ்ய விஷயத்தையும் சேர்த்திருப்பார் சக்தி. இது திரைக்கதையில் பரபரப்பைக் கூட்டியது.

ரஜினி மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு நடித்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று. இளையராஜா இசையில் அமைந்த 'ஆகாய கங்கை' என்னும் டூயட் பாடலில் அந்த கண்ணாடியையே கையில் சுழற்றியபடியே நடந்துவந்து அபாரமான ஸ்டைல் காட்டியிருப்பார். இந்தப் பாடலையும், தங்கையின் மீதான பாசத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைந்த 'ஒரு தங்க ரதத்தில்' என்னும் பாடலையும் மலேசியா வாசுதேவன் அருமையாகப் பாடியிருப்பார். இன்றுவரை இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பாடல்களாக இவை இரண்டும் நிலைத்துவிட்டன.

படத்தில் ரஜினியும் ஸ்ரீதேவியும் முதலில் மோதிக்கொள்வதும், பிறகு காதல் ஜோடியாவதும், ரஜினியின் தங்கையின் மரணத்துக்குப் பிறகு ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருப்பதும் என இந்தப் படத்தின் லவ் ட்ராக் வெறும் கமர்ஷியல் திணிப்பாக அல்லாமல் அழகான இணைப்பாக அமைந்திருக்கும்.

படத்தின் சண்டைக் காட்சிகளும் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கவை. இதற்கு முந்தைய படங்களிலேயே ரஜினி ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னுடைய அபார திறமையைக் காண்பித்து ரசிக்க வைத்திருந்தாலும் அவர் முதன்மைக் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய புதிதில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக வாய்ப்பளித்த படங்களில் இதுவும் ஒன்று. வணிக வெற்றிபெற்ற படமும்கூட. ஆகவே ரஜினியை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம் என்கிற வகையிலும் 'தர்மயுத்தம்' முக்கியத்துவம் பெறுகிறது.

இப்படிப் பல காரணங்களுக்காக ரஜினியின் திரை வாழ்வில் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது 'தர்மயுத்தம்'. இந்தப் படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் யூடியூபிலோ தொலைக்காட்சியிலோ பார்த்தால் பெரியவர்கள் 1970களின் இறுதிப் பகுதிக்கு மீண்டும் கடத்திச் செல்லப்படுவதையும் இளைஞர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் நாம் வாழவில்லையே என்னும் ஏக்கம் ஏற்படுவதையும் தவிர்க்கவே முடியாது.


தவறவிடாதீர்!

தர்மயுத்தம்ரஜினிஸ்ரீதேவிஇயக்குநர் ஆர்.சி.சக்திகமலின் அண்ணன்தேங்காய் சீனிவாசன்மேஜர் சுந்தர்ராஜன்சுருளி ராஜன்One minute newsDharma yuddhamRajiniSrideviDirector rcsakthiKamal brotherThangai srinivasanMajor sundarajanSuruli rajan

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x