மணிகர்னிகாவைத் தொடர்ந்து கங்கணா இயக்கும் எமர்ஜென்ஸி

மணிகர்னிகாவைத் தொடர்ந்து கங்கணா இயக்கும் எமர்ஜென்ஸி
Updated on
1 min read

'மணிகர்னிகா: ஜான்ஸி ராணி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை கங்கணா ரணாவத் 'எமர்ஜென்ஸி' என்கிற படத்தை இயக்குகிறார்.

நடிகை கங்கணா ரணாவத், இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக முன்னரே அறிவித்திருந்தார். இதற்கான ஒப்பனை, ஆடைகள் ஒத்திகையைச் செய்தும் பார்த்தார். ஆனால், இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லாது என்றும், இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் நடந்த கதையாக இருக்கும் என்றூம் கங்கணா தெரிவித்திருந்தார்.

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்தைக் கங்கணாவே இயக்குகிறார் என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

"மீண்டும் இயக்குநர் பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக 'எமர்ஜென்ஸி' திரைக்கதையில் பணியாற்றிய பிறகு, என்னைவிட அதை வேறு யாரும் இயக்க முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன். ரிதேச் ஷா என்கிற அற்புதமான கதாசிரியரோடு இணைந்து பணியாற்றுகிறேன்.

இதற்காகச் சில நடிக்கும் வாய்ப்புகளை நான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்றாலும், இதைச் செய்ய நான் தீர்மானமாக இருக்கிறேன். உற்சாகம் அதிகமாக இருக்கிறது. இது ஒரு அட்டகாசமான பயணமாக, எனது அடுத்தகட்டப் பாய்ச்சலாக இருக்கும்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார்.

கதாசிரியர் ரிதேஷ், 'பிங்க்', 'கஹானி', 'கஹானி 2', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். முன்னதாக, கங்கணா ரணாவத்தை வைத்து ’ரிவால்வர் ராணி’ என்கிற படத்தை இயக்கிய சாய் கபீர், இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in