Published : 24 Jun 2021 18:16 pm

Updated : 24 Jun 2021 18:16 pm

 

Published : 24 Jun 2021 06:16 PM
Last Updated : 24 Jun 2021 06:16 PM

வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: 2 வருடங்களுக்கு முன் நடிகர் காளிதாஸுக்கு எழுதிய கடிதம் 

vismaya-love-letter-to-kalidas

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் விஸ்மயா, தனக்கு விளையாட்டாக எழுதிய கடிதம் குறித்து நடிகர் காளிதாஸ் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், மேட்ரிமோனியல் தளம் மூலம் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்துகொண்டவர் விஸ்மயா. 22 வயதான இவர் இறுதியாண்டு ஆயுர்வேத மருத்துவப் படிப்பு படித்து வந்தார்.


வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான இவர் ஜூன் 21ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, தனக்குக் காயம் ஏற்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். விஸ்மயாவின் கணவர் கிரண் தற்போது காவல்துறையில் சரணடைந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு, விஸ்மயாவின் கல்லூரியில், காதலர் தினத்தன்று நடந்த காதல் கடிதம் எழுதும் போட்டியில், நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்காக விஸ்மயா எழுதிய கடிதம் குறித்துத் தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விஸ்மயாவின் தோழி அருணிமா பதிவிட்டுள்ளார். "இந்தக் காதல் கடிதம் வைரலாக வேண்டும், அதன் பின் காளிதாஸ் இதைப் படித்து, என்னைச் சந்திக்க அழைப்பார். என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வார். இப்போது அவர் கன்னக் குழி இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது" என்று அருணிமா இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது நடிகர் காளிதாஸின் கவனத்துக்குச் சென்றது. இதற்கு பதிலளித்திருக்கும் நடிகர் காளிதாஸ், "அன்பார்ந்த விஸ்மயா. உங்களை நேசித்த மக்களை விட்டு நீங்கள் சென்றபிறகுதான் உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்தது. மன்னித்து விடுங்கள். யாரும் கேட்காத அந்தக் குரலுக்கு, எரிந்துபோன அந்தக் கனவுகளுக்கு இரங்கல்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும், தனியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஸ்மயாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்தச் சம்பவம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார் காளிதாஸ்.

"விஸ்மயா வி நாயர் பற்றியும், அவரது மோசமான முடிவுக்கான காரணங்கள் குறித்தும் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அதிக படிப்பறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி, உலகின் அத்தனை மூலைகளிலிருந்தும் பெறப்படும் அறிவு என்று எல்லாம் இருந்தும் நமது மக்களுக்கு வரதட்சணை என்கிற குற்றத்தால் ஏற்படும் தீவிர விளைவுகள் குறித்தும், துன்புறுத்தல் எவ்வளவு தவறு என்பதும் இன்னும் புரியவில்லை என்பதைச் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காயத்தழும்புகள் எல்லாமே கண்களுக்குத் தெரிவதில்லை, எல்லாக் காயங்களிலும் ரத்தம் தெரிவதில்லை. நமக்கு யதார்த்தம் உறைக்க இன்னும் இதைப்போல எவ்வளவு சோகங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

ஒரு மோசமான, காயப்படுத்தும் இடத்திலிருந்து வெளியேறுவது ஏன் வரவேற்கப்படுவதில்லை. எப்போதுமே ஏன் பாதிக்கப்படுபவர்களைச் சுற்றியே சமூகம் களங்கம் சுமத்துகிறது. அப்படி பாதிக்கப்பட்டவர்களை நாம் ஏன் அரவணைப்பதில்லை? வரதட்சணை என்பதை ஒரு வழக்கம் என்று ஒப்புக்கொள்வது எவ்வளவு தவறானது, எந்த வகையான துன்புறுத்தலுக்கும் அமைதியாக இரு என்று சொல்வது, ஊக்குவிப்பது எவ்வளவு இரக்கமற்றது என்பதை ஒப்புக்கொள்ள ஒரு வளர்ச்சி அடைந்த சமூகமாக நமக்கு ஏன் கடினமாக இருக்கிறது?

ஏற்கெனவே இருக்கும் சட்டங்களில் இன்னும் கடுமையான விதிகள் சேர்க்கப்படும் என்றும், மக்களுக்கு இதுகுறித்துக் கற்பிக்க, அதிகாரமளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நம்புகிறேன். மீண்டும் நம் வீட்டுப் பெண்களை முன்னிறுத்துவோம். சமூக ஊடகங்களில் வெறும் ஹேஷ்டேக் அளவில் மட்டும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்துவோம்" என்று காளிதாஸ் பதிவிட்டுள்ளார்.


தவறவிடாதீர்!

வரதட்சணை கொடுமைகேரளா பெண் தற்கொலைவிஸ்மயா தற்கொலைகாளிதாஸ் ஜெயராம் பதிவுகாதல் கடிதம்விஸ்மயா கடிதம்குடும்ப வன்முறை சம்பவம்விஸ்மயா கிரண்Vismaya suicide caseKerala dowry caseVismaya kalidas jayaramVishayama domestic violenceVismaya physical abuse

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x