Published : 21 Jun 2021 11:40 AM
Last Updated : 21 Jun 2021 11:40 AM

திரையரங்க வெளியீட்டுக்காக நான் வைத்திருந்த படம் 'மாலிக்' - ஃபகத் பாசில் வருத்தம்

திரையரங்குகள் திறக்கப்பட்டபின் அந்த அனுபவத்துக்காகவே தான் வெளியிட வைத்திருந்த படம் 'மாலிக்'. இப்படம் தற்போது ஓடிடியில் வேறு வழியின்றி வெளியாகிறது என்று நடிகர் ஃபகத் பாசில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஃபகத் பாசிலின் 'மாலிக்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கரோனா நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து, 'ஸி யூ ஸூன்', 'ஜோஜி', 'இருள்' என மூன்று திரைப்படங்கள் ஃபகத்தின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

ஆனால், இவை அனைத்துமே ஓடிடி வெளியீட்டுக்காக எடுக்கப்பட்டவையே. 'மாலிக்' பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரையரங்க வெளியீட்டுக்காக எடுக்கப்பட்ட படம். 'டேக் ஆஃப்', 'ஸி யூ ஸூன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் கரோனா நெருக்கடியால் மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற நிச்சயமில்லாத சூழலில் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடத் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் முடிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தன் ரசிகர்களிடம் படம் ஏன் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்து ஃபகத் பாசில் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

"என் பக்கம் இவ்வளவு வருடங்கள் நிற்கும் ரசிகர்களுக்கு சில விஷயங்களை நான் விளக்கக் கடமைப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். கனத்த இதயத்தோடு, எங்களின் லட்சியகரமான 'மாலிக்' திரைப்படத்தை, ஓடிடியில் வெளியிடலாம் என்று இயக்குநர், தயாரிப்பாளர், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் குழு முடிவெடுத்திருக்கிறோம்.

இந்தப் படத்தைக் கொண்டுவர படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு வருடத்துக்கும் மேலாக உழைத்திருக்கிறோம். சமீபத்தில் ஓடிடியில் வெளியாகிய என் படங்கள் முதலிலேயே வீட்டிலிருந்து பார்க்கும் ரசிகர்களுக்காக திட்டமிட்டு எடுக்கப்பட்டது. ஆனால், 'மாலிக்' திரையரங்க அனுபவத்துக்காக வடிவமைக்கப்பட்டது. திரையரங்குகள் 100 சதவீதம் திறக்கப்பட்டபின் வெளியிடலாம் என்று நான் வைத்திருந்த ஒரே படம் 'மாலிக்'தான்.

எல்லோரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, படத்தின் நலனுக்காக இது நடக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மீண்டும் திரையரங்குகள் எப்போது சகஜ நிலைக்குத் திரும்பும் என்று நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், இன்று ஒவ்வொரு தனி மனிதனுமே அவரவர் வாழ்க்கையில் சகஜ நிலையைத் திரும்பப் பெறப் போராடி வருகிறார்கள்.

அடுத்த முறை உங்களை நான் திரையரங்கில் சந்திக்கும்போது அது உங்களுக்கான புத்தம் புதிய அனுபவமாக இருக்கும் என்பதற்கு மட்டும் இந்தத் தருணத்தில் என்னால் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்" என்று ஃபகத் பாசில் குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் ப்ரைம் தளத்தில் 'மாலிக்' திரைப்படம் நேரடியாக வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x