Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

புது விஷயங்கள்தான் சக்தி தருகிறது: ஆர்ஜே பாலாஜி நேர்காணல்

ஆர்ஜே பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன்’திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கி, நடிக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார். ‘ஸ்பாட்டிஃபை’ (Spotify) மியூசிக் செயலி மூலம் ‘நாலணா முறுக்கு’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பையும் கையில் எடுத்துள்ளார். அவருடன் உரையாடியதில் இருந்து..

அது என்ன ‘நாலணா முறுக்கு’?

ஆடியோ நிகழ்ச்சிகளில் உலகஅளவில் பிரபலமாக விளங்கும் ‘ஸ்பாட்டிஃபை’ தளத்தை 35 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அது இங்கு2019-ல் அறிமுகமானது. இதில் ஸ்பாட்டிஃபை ஒரிஜினல் என்ற பிரிவில் முதன்முதலாக தமிழில் ஒரு ஆடியோ நிகழ்ச்சி வழங்குவதற்காக என்னிடம் கேட்டனர். நம்மை சுற்றிநடக்கும் நிறைய நல்ல விஷயங்களை வாராவாரம் திங்கள்கிழமை ‘நாலணா முறுக்கு’ என்ற பெயரில் வழங்குகிறேன். இந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலே, இலவசமாக கேட்கலாம். இணையத்தில் எதுவானாலும் மிக வேகமாக பரவுகிறது. எனவே, நல்ல விஷயங்களை மட்டுமே பேசுகிற களமாகத்தான் இதை பயன்படுத்த உள்ளேன். அதே ஆர்ஜே பணி. களம்தான் வேறு.

முழுக்க இணைதள உலகம் பற்றி மட்டும்தான் பேசுவீர்களா?

கூறுகட்டி ஆயாக்கள் விற்ற பழங்களில் பூச்சிகள் இருக்கும். ஆனால், பூச்சிகள் உள்ள பழங்கள்தான் பூச்சிக்கொல்லி இல்லாத நல்ல பழங்கள்..

வயதான பாட்டி கரோனா நிவாரண நிதி வாங்க வேண்டும். அதுக்கு ஆதார் கார்டு அவசியம். ஆதரவில்லாத அந்த பாட்டிக்கு ஒரு பையன் ஆதார் கார்டு வாங்க உதவி செய்கிறான்..

சில நாள் முன்பு கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் குளிர்பான பாட்டிலை ஒதுக்கிவைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து அருகே வைத்த வீடியோவைரலானது. அதனால் அந்த நிறுவனத்துக்கு பல கோடி இழப்பு.. இதெல்லாம் சுவாரசியமான, நல்ல செய்திகள்தானே. இதுபோன்றதை பகிர்வேன்.

ஆர்ஜே, நடிகர், இயக்குநர், கிரிக்கெட் வர்ணனையாளர் என ஓடிக்கொண்டே இருக்கிறீர்களே?

நான் ஓடவே இல்லை. இந்த கரோனா ஊரடங்கு நேரத்தில் பலரும்‘மூணு, நாலு ஸ்கிரிப்ட் ரெடி செய்தேன்’ என்பார்கள். நானோ வீட்டில் சமையல், குழந்தைகளுடன் நேரம் போக்கியது, மாடியில் விளையாட்டு என இயல்பாக நேரத்தை கழித்தேன். ‘மூக்குத்தி அம்மன்’ படம் முடித்த பிறகு கிடைத்த இடைவெளியில் கிரிக்கெட் வர்ணனை வேலையை கவனித்தேன். இதுபோல திடீரென ஒரு புதுவிஷயத்தில் கவனம் செலுத்துவதுதான் எனக்கு ரிலாக்ஸ் தருகிறது. அதனால்தான் எனர்ஜியோடு பயணிக்க முடிகிறது. மீண்டும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படக் குழுவுடன் இணைந்து ஒரு படம் இயக்கி, நடிக்க உள்ளேன். இதையும் சரவணனும், நானும் இணைந்து எடுக்க உள்ளோம். அதற்கான வேலை நடக்கிறது. அடுத்தடுத்து சில கதைகள் எழுதி, இயக்கி, நடிக்கும் வேலைகளையும் தொடங்க உள்ளேன். சில பெரியஇயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளேன். அதற்கும் நேரம் ஒதுக்கி வைத்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x