‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: ஆமிர் கான் நெகிழ்ச்சி
ஆமிர் கான் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான படம் ‘லகான்: ஒன்ஸ் அபான் எ டைம் இன் இந்தியா’. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அஷுடோஷ் கோவாரிகர் இயக்கிய இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இன்றுடன் ‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பலரும் அது குறித்த ஹாஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘லகான்’ படம் குறித்து ஆமிர் கான் கூறியுள்ளதாவது:
‘லகான்’ இப்போதும் எப்போதும் எனக்கு ஒரு அற்புதமான பயணமாக இருந்து வருகிறது. அந்த பயணத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் என்னால் புதிய மனிதர்களை சந்திக்க முடிந்தது, புதிய நண்பர்களை, புதிய உறவுகளை உருவாக்க முடிந்தது. அவர்களுடன் நான் எண்ணற்ற விஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த பயணம் என்னை பல வழிகளில் செதுக்கியுள்ளது.
இந்த பயணத்தில் இயக்குநர் அஷி, ஒட்டுமொத்த படக்குழுவினர், உலகம் முழுவதுமுள்ள பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் என அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். நாங்கள் அனைவருமே இந்த பயணத்தின் மூலம் ஒன்றிணைந்தவர்கள். சிலர் ஆரம்பத்தில் இணைந்திருக்கலாம், சிலர் தாமதாக இணைந்திருக்கலாம் ஆனால் அனைவரும் சக பயணிகளே.
இவ்வாறு ஆமிர் கான் கூறியுள்ளார்.
