தேசிய விருது வென்ற கன்னட நடிகர் மூளைச்சாவு: உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு

'நான் அவனல்ல அவளு' திரைப்படத்தில் சஞ்சாரி விஜய்.
'நான் அவனல்ல அவளு' திரைப்படத்தில் சஞ்சாரி விஜய்.
Updated on
1 min read

விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் 'சஞ்சாரி' விஜய் மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு வயது 38. விஜய்யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

ஜூன் 12ஆம் தேதி அன்று நண்பருடன் பைக்கில் பயணப்பட்டார் நடிகர் 'சஞ்சாரி' விஜய். பைக் சறுக்கி விளக்குக் கம்பம் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜய் அனுமதிக்கப்பட்டார்.

மூளையின் வலது பக்கமும், தொடையிலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவரது மூளையில் ரத்த உறைவை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி விஜய் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

சஞ்சாரி என்கிற நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் விஜய். அதிலிருந்து திரைத்துறைக்கு வந்ததால் 'சஞ்சாரி' விஜய் என்றே அறியப்பட்டார். 'ரங்கப்பா ஹோக்பிட்னா' என்கிற படத்தின் மூலம் 2011ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தார். 'கில்லிங் வீரப்பா', 'வர்த்தமானா' உள்ளிட்ட பல படங்களில் விஜய் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு, 'நான் அவனல்ல, அவளு' என்கிற படத்தில் திருநங்கையாக நடித்த விஜய்க்கு அந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

கடந்த வருடம் கோவிட் நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து சமீபத்திய ஊரடங்கு வரை, மக்கள் விழிப்புணர்வுக்கான பல தகவல்களை, செய்திகளை விஜய் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்திருந்தார். உஸிரே என்கிற அமைப்புடன் இணைந்து, கோவிட் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உதவிக்கும் பங்காற்றியிருந்தார்.

சஞ்சாரி விஜய்யின் மறைவுக்கு கன்னட திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in