Published : 09 Jun 2021 15:19 pm

Updated : 10 Jun 2021 22:19 pm

 

Published : 09 Jun 2021 03:19 PM
Last Updated : 10 Jun 2021 10:19 PM

பொதி: 9 நிமிடக் குறும்பட அனுபவம்!

short-film

வீரா

நிராதரவான விளிம்புநிலைக் குடும்பம் ஒன்றின் கனம்மிகுந்த ஒரு வாழ்வின் தருணத்தைப் பதிவு செய்கிறது இந்தக் குறும்படம். வறுமையும் சமூகப் பாதுகாப்பின்மையும் ஒரு தலைமுறையின் கல்வியை அறுபடச் செய்யும் துயர்மிகு வலியைப் பேசுகிறது இந்தக் கதையாடல்.

கணவனை இழந்த ஒரு ஏழை கிராமத்துப் பெண், ஆண்களின் வன்மம் நிறைந்த காமப்பார்வையிலிருந்து வயது வந்துவிட்ட தன்னுடைய மகளைக் காப்பாற்றும் பொருட்டு, அவளுக்கு விரைந்து திருமணம் முடித்துவிடத் தீர்மானிக்கிறாள். அதற்காக நெஞ்சத்தைக் கனக்க வைக்கும் ஒரு முடிவை அவள் எடுக்கிறாள். அந்த முடிவு இளம் மாணவனான அவளுடைய மகனின் கல்வியை முடிவுக்குக் கொண்டு வருகிறது. அவளைப் பொறுத்தவரை அவள் கண்டடைந்த தீர்வு சரியானதே. ஆனால், ஒரு குழந்தையின் கல்வி நிறுத்தப்படுவதென்பது ஒரு குடும்பத்துக்கான இழப்பு மட்டுமல்ல, மொத்த சமூகத்துக்குமான பேரிழப்பும் கூட. இதை மையக்கருவாகக் கொண்ட இந்தக் கதையின் உணர்வுகளை மிகச் சரியாகத் தன் திரைமொழியின் மூலம் நமக்குக் கடத்துகிறார் இயக்குநர் பிரவீன் கே.மணி.


படம் ஆரம்பமாகும் முதல் ஷாட்டில் சட்டென்று நம் கண்முன்னே அழகான ஓவியம் போன்றதொரு காட்சி விரிகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் துயரத்தின் உணர்வுத் தாக்கம் படம் நெடுகிலும் உயர்ந்துகொண்டே வந்து, இறுதிக்காட்சியில் அதே ஷாட்டில் உச்சம் பெறுகிறது. “கண்ணே கண்ணுமணி கண்ணுறங்கு“ என்ற கவித்துவம் மிக்க டைட்டில் பாடலின் வரிகளும், மனதை வருடும் இசை மெட்டும், அடர்த்தியான சோகத்தை நமக்குள் ஊடுருவச் செய்யும் பெண் குரலின் பாடலுமாக அந்த ஆரம்பக் காட்சியே படத்தின் அடிநாதத்தை நம் மனத்துக்குள் நிலைபெறச் செய்துவிடுகின்றன.

கதையை ஆரம்பிப்பதும் அதன் முக்கியமான திருப்புமுனையும் வசனத்தின் வழியேதான் வெளிப்படுத்தப்படுகின்றன. என்றாலும் அந்தக் குடும்பத்தின் வறுமை நிலையை நமக்குக் கடத்துவதிலும், கணவனைப் பற்றிய நினைவுகளை தன் மகன் ஆடும் கூத்தின் வழியே அந்தத் தாய் மீட்டுக் கொண்டுவருவதிலும் எனச் சாத்தியமான எல்லாக் காட்சிகளிலும் காட்சிமொழி செய்நேர்த்தியுடன் கையாளப்படுகிறது.

சினிமா என்பதே கூட்டுத் திறமைகளின் கலவை என்பதற்கு சிறுவனின் கூத்துக் காட்சியே மிகச் சிறந்த உதாரணம். மண்ணெண்ணெய் விளக்கின் சுடரொளி வீடு முழுதும் பரவியிருக்க, அதன் பின்னனியில் கிராமியக் குரல்களின் வசீகரத்தில் ஒலிக்கும் “நானும் பிறந்தது வல்லநாடு, சுவாமி பிறந்தது ராமநாடு” பாடலின் ஒளிப்பதிவு, எடிட்டிங், சிறப்பு சப்தங்கள், முகபாவங்கள் என்று அனைத்துக் கலை வெளிப்பாடுகளும் அக்காட்சியில் மிகச் சிறப்பாக ஒருங்கிணைந்துள்ளன..

மகனை இடுப்பில் ஏற்றிக்கொள்ளும் வாஞ்சையும், பயத்தை அடிமடியில் கட்டிக்கொண்டு வாழும் பதற்றமும், உரிமைக் கெஞ்சலுடன் மகனைக் கூத்தாடக் கேட்டுக்கொள்ளும் குழைவும், துயரங்களை மறந்துவிட்டு கூத்தை ரசித்துச் சிரிக்கும் வெள்ளந்தித்தனமும், மகனைப் பிரியும் கனத்த இதயமுமாக அந்தக் கதாபாத்திரத்தின் அத்தனை அகத்துயரங்களையும் தன்னுடைய ஆன்மாவில் உள்வாங்கிக் கொண்டு, உடல் பாவங்களின் மூலம் அவற்றை இயல்பாக வெளிப்படுத்தி தன் ஆளுமையை நிறுவுகிறார் நடிப்புக் கலைஞர் செம்மலர் அன்னம்.

பொருத்தமான சட்டகங்களாலும் இயல்பான ஒளியமைப்புகளாலும் கதையின் உணர்வுகளைத் துல்லியமாக நமக்குக் கடத்துகிறார் ஒளிப்பதிவு இயக்குநர் லோகேஷ் இளங்கோவன்.

வீட்டுக்குள் நடக்கும் கூத்துக் காட்சியில் தவறிப்போகும் சில கண்டினியூட்டிகளும், வட்டார மொழியின் பிரயோகத்தில் செம்மலர் அன்னம் இன்னும் செலுத்த வேண்டிய கவனமும் மெலிதாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியவையே தவிர குறை சொல்ல வேண்டியவை அல்ல.

கால்வாயின் அக்கரையில் வாகனப் போக்குவரத்து வசதிகளுடன் வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இக்கரையில் மண்பாதையின் வழியாக இந்தக் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றன. புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதர்களின் வாழ்வை நாமும் அறிந்துகொள்ள, அந்தக் கதாபாத்திரங்களின் பின்னால் நம்மையும் அழைத்துச் செல்கிறார் இதன் படைப்பாளி. அவரைப் பின்தொடர வேண்டியதே நாம் இந்தப் படைப்புக்குச் செய்யும் கடமையும் மரியாதையும் ஆகும்.

- வீரா

தொடர்புக்கு: a.d.veerakkumar@gmail.com.

குறும்படத்தைக் காண:

தவறவிடாதீர்!

PothiOne minute newsShort filmபொதி: 9 நிமிட குறும்பட அனுபவம்!அழகான ஓவியம்குறும்படம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x