Last Updated : 23 Jun, 2014 11:09 AM

 

Published : 23 Jun 2014 11:09 AM
Last Updated : 23 Jun 2014 11:09 AM

ராம நாராயணன்: தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா!

குறைந்த காலத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டும் சாதுர்யம் மிக்க இயக்குநர் ராம நாராயணன். உங்களின் மனம்கவர்ந்த இயக்குநர் யார்? என்று இன்றைய இளைய சமுதாயத்திடம் கேட்டால் ஷங்கர், மணி ரத்னம், பாலச்சந்தர், பாலு மகேந்திரா, வெற்றி மாறன், குமார ராஜா, வசந்த பாலன் என்று அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதே சமுதாயத்திடம் சற்று காலங்கள் பின்னோக்கி, இதே கேள்வியை கேட்டுப் பார்த்தால், கண்டிப்பாக ராம நாராயணன் அவர்கள் அப்பட்டியலில் முக்கிய அங்கம் வகித்திருப்பார்.

ராம நாராயணன்... இவர் குழந்தைகளின் இயக்குநர். இன்றையச் சூழலில் மார்வெல், டி.சீ.காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் மிகுந்த பிரபலமாகிவிட்டது. சிறுவர்கள் அயர்ன் மேன், ஸ்பைடேர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ படங்களை எல்லாம் பார்த்து திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1980களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை சென்று பார்த்தோமானால், அன்றைய சூழலில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோ ராமசாமி'யாக வரும் யானை நாகேஸ்வரியாக வரும் பாம்பு. நண்பனாக வரும் ராமு எனும் குரங்கு. மிருகங்களை படத்தின் மையக் கதாப்பாத்திரமாக வைத்து 'தேவர் பிலிம்ஸ்' விட்டுச் சென்ற தலையாய கடமையை முன்னின்று நடத்திய இயக்குநர் ராம நாராயணன்.

சிகப்பு மல்லி படத்தில் கம்யூனிசத்தை பற்றி ஆணித்தரமாக உரைத்த ராம நாராயணன், தன்னை ஒரு வகையான சினிமாவுக்கென வரையரைத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒரே கதையம்சத்துடன் வகை வகையான படங்களை அளித்திருக்கிறார். இவரின் நிறைய படங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு ஒரு நன்னெறி கதை கூறுவது போல் அமைந்திருப்பதை காணலாம்.

ராஜ காளியம்மன், அன்னை காளிகாம்பாள், பாளையத்தம்மன், மாயா போன்ற படங்கள் எல்லாம் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரே கதை. உண்மையான பக்தைக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போது கடவுள் அவதரிப்பார் என்பதே இவ்வனைத்து படங்களின் நாட். ஆனால் இந்த ஒரே முடிச்சினை வைத்துக் கொண்டு அதை விதவிதமாக பரிமாறிய விதத்தில்தான் ராம நாராயணன் நிற்கிறார். உலகிலே அதிக பட்சமாக 125 படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் என்றால் சும்மாவா?

பால்ய காலத்தில் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு தீபாவளிபோது சென்னை முழுவதும் அலைபாயுதே, வல்லரசு பார்க்க அலைந்து கொண்டிருந்தது. அப்போது அப்பாவிடம் அடம்பிடித்து ராஜகாளியம்மன் படம் பார்க்க அழைத்துச் செல்ல வைத்திருக்கிறேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவரின் அம்மன் படங்களை தொடர்ந்து வெளியிடும் திரையரங்கங்களில் அம்மன் சிலை கூட வைக்கப்பட்டிருந்தது. ஆடி வெள்ளி பார்க்கச் சென்றபோது, அப்போது சாமி வந்த மக்கள் ஆடிய கதையையும் கேட்டிருக்கிறேன்.

கே.கே.நகர் விஜயா திரையரங்கில் (இப்போது இருக்கும் விஜயா திரையரங்கம் அல்ல; அப்போது சூழல் வேறு) ராஜகாளியம்மன் படம் பார்த்தபோது 'அய்யோ என் தலை வலிக்குது, அப்படியே கழட்டி வெக்கணும் போல இருக்கே' என்று ஒய்.விஜயா பேசும்போது, அவ்வளவு தானே கழட்டி வெச்சிட்டா போச்சு என்று கூறி வடிவேலு வை.விஜயாவின் தலையை உடலிலிருந்து எடுத்து பந்தாக்கி, அரை முழுதும் சுற்ற விட்டு திருப்பி, கீழுக்கும் மேலுக்குமாக உதைத்து பின் தலையிலே இணைக்கும் காட்சியெல்லாம் விழுந்து விழுந்து சிரித்து ரசித்ததுண்டு. இந்த பலூன்'ல வெறும் மூச்சுக்காற்று இல்லம்மா உங்க அண்ணன் மூச்சு இருக்கு என்று வடிவேலு பேசுவார். பின் அதே பலூன் உடைந்து போகும்போது அப்போது அதைக்கண்டு அடுத்து வடிவேலுக்கு என்ன ஆகுமோ! என்று வெடவெடுத்து போனதும் உண்டு. அப்போது சரண் ராஜ், கரன் எல்லோரையும் பார்த்தாலே பாட்டியுடன் சேர்ந்து நானும் திட்டியிருக்கிறேன்.

இப்போது நாகேஷை கோச்சடையானில் மீட்டுக் கொணர்ந்ததை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த முயற்சியை தமிழ் சினிமாவில் முதல்முறை செய்தது ராமநாராயணன் என்று ஞாபகம் இருக்கிறதா? 'கந்தா கடம்பா கதிர்வேலா' படத்தில் ஒரு பாடலுக்கு பிரபு, எஸ்.வீ.சேகர், வடிவேலு, விவேக்குடன் எம்.ஜீ.ஆரையும் இணைத்து ஆட வைத்திருப்பார் ராம நாராயணன்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் விவேக், வடிவேலுவின் வளர்ச்சிக்கு பெரிதாக வித்திட்டவர் ராம நாராயணன் என்பது மறுத்தற்குரியதா? திருப்பதி எழுமல வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா, விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாளையத்தம்மன் படத்தில் இவர் அமைத்திருந்த நகைச்சுவை காட்சிகள் எல்லாவற்றையும் எப்படி மறக்க முடியும்?

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பார்வையாளர்கள் முக்கியமாக திரையரங்க உரிமையாளர்கள் இப்படிப் பலரின் முகத்தில் புன்னகை பிறக்கச் செய்த இயக்குநர் இவர். கிருஷ்ணவேனி, கோபி கிருஷ்ணா, விஜயா போன்ற திரையரங்கங்கள் இவரின் படங்களிலாலே வாழ்ந்த கதைகளும் உண்டு.

தொலைக்காட்சியில் 'பாப்பா பாடும் பாட்டு, கேட்டு தலையை ஆட்டு' என்று ஷாமிலி பாட, அதை கேட்டு தலையாட்டி நானும் பாடிய காலகட்டங்கங்களும் இருக்கின்றது. இன்று கூட 'கனே கனே கனே கணேஷா தொப்ப கணேஷா', 'பாபா ஓர் கருணாலயம் படம் அவர் பாதங்கள் சரணாலயம்', 'பாளையத்து அம்மா நீ பாச விளக்கு' போன்ற பாடல்களை கேட்டால் அப்படியே ரீ-வைன்ட் எடுத்து குழந்தைப் பருவத்திற்கு திரும்புகிறேன். யானைக்கு பேன்ட்-சட்டை போட்டு கிரிக்கெட் பேட்டுடன் ஆட வைத்த ராம நாராயணன், என்றும் தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா.

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x