Published : 06 Jun 2021 05:17 PM
Last Updated : 06 Jun 2021 05:17 PM

'பேட்ட' படத்தில் மறக்க முடியாத காட்சி: கார்த்திக் சுப்புராஜ் பதில்

சென்னை

'பேட்ட' படத்தில் மறக்க முடியாத காட்சி குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்து வருகிறது.

இதில் "’பேட்ட’ படத்தில் உங்களால் மறக்க முடியாத காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்" என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:

”கடைசியில் அந்த ராமன் ஆண்டாலும் பாடல் தான். முதலில் நாங்கள் அந்த காட்சிக்கு வேறொரு இசையை யோசித்து வைத்திருந்தோம். நாயகன் அவ்வளவு வருடங்கள் மனதில் இருந்த பகையைத் தீர்த்து விட்டு, வில்லனைக் கொன்று விட்டு வந்த பிறகு உற்சாகமாக நடனமாட வேண்டும். ராமன் ஆண்டாலும் பாடலை அங்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணமே எனக்கு முதலில் இல்லை. ருத்ர தாண்டவம் போல மனதில் வைத்திருந்தேன். நானும் அனிருத்தும் பேசி ஒரு இசையைத் தயார் செய்தும் விட்டோம்.

அதை ரஜினி அவர்களும் கேட்டார். யோசனையாக எல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் இது இறுதிக் காட்சி. படம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் ரசிகர்கள் உற்சாகமாகச் செல்ல வேண்டும். இது போன்ற இசை இருக்கக் கூடாது என்று வேறொரு பழைய பாடலை உத்தேசித்தார். அதை ரீமிக்ஸ் செய்யலாமே என்றார். அப்படியென்றால் ராமன் ஆண்டாலும் பயன்படுத்தலாமே என்று சொன்னேன், அதற்கு அவர் சம்மதித்தார்"

இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x