Published : 04 Jun 2021 05:18 PM
Last Updated : 04 Jun 2021 05:18 PM

நீங்கள் வழிகாட்டிய பாதை: தந்தை மறைவு குறித்து ஜி.என்.ஆர். குமாரவேலன் உருக்கம்

தனது தந்தையின் மறைவு குறித்து, குவிந்த இரங்கல் அழைப்புகள் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஜி.என்.ஆர்.குமாரவேலன்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்', ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். நேற்று (ஜூன் 3) காலை 8:45 மணியளவில் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர்.குமாரவேலனும் இயக்குநராக வலம் வருகிறார்.

தனது தந்தையின் மறைவு குறித்து ஜி.என்.ஆர்.குமாரவேலன் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"அப்பாவை நேசித்தவர்கள் இத்தனை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறைசாற்றுகிறது. என் இழப்பைத் தங்கள் வீட்டு இழப்பாகக் கருதி, அப்பா இறந்த செய்தியைப் பல ஊடகங்களில் கொண்டுசென்ற அனைவருக்கும் நன்றி.

திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்றுக்கொண்ட ஒரு விஷயம். அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாமே அழகாக யோசித்து நேர்த்தியாகத் திட்டமிடுவது அப்பாவின் பலம்.

படப்பிடிப்பை அப்பா, திட்டமிடும் விதத்தை நேரில் பார்த்துப் பிரமித்த எனக்கு, அவர் தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறியபொழுது, மகனாக நொறுங்கிப் போனேன்.

எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி நடத்த வேண்டும்...இன்னும் என்னென்னமோ... எனக்குத்தான் கேட்க மனதளவில் தைரியமில்லை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால். பாழாய்ப் போன கரோனா, உயிர்களை மட்டும் பறிக்கவில்லை, மனிதர்களின் கடைசி நிமிடங்களையும் கொன்றுவிடுகிறது.

நம்முடன் பழகிய, நம்முடன் பயணித்த, நம்மிடம் வேலை செய்த, நமக்கு வாழ்வு கொடுத்த ஜி.என்.ரங்கராஜனைப் பலர் கடைசியாகப் பார்க்க முடியாமல் செய்துவிட்டது கரோனா.

நேரில் வர முடியாவிட்டாலும், அப்பாவைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போன உங்கள் வலியை உணர்கிறேன். நிச்சயம் அப்பாவின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுக்கு இருக்கும். இன்பத்தில் ஒன்று கூடவும், துன்பத்தில் தோள் கொடுக்கவாவது கரோனா ஒழிய வேண்டும்.

அப்பா...

நீங்கள் வழிகாட்டிய பாதையில் பயணிக்கிறேன். அருகில் நீங்கள் இருந்து என் வாழ்வைத் திட்டமிட்டு என்னை வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்".

இவ்வாறு ஜி.என்.ஆர்.குமாரவேலன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x